Tamilnadu

வெடி சத்தத்துடன் திடீர் நில அதிர்வு; பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் - கரூரில் பரபரப்பு!

கரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தாந்தோன்றிமலை, கருப்புக்கவுண்டன், புதூரில் பகுதியில் உள்ள வீடுகளில் திறந்தருந்த கதவுகள் தானாக மூடியதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

கரூரில், இன்று காலை 11.05 மணியளவில் திடீரென்று அதி பயங்கரமான வெடிச்சத்தம் ஒலித்த அடுத்த நொடி சில வினாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், வெங்கமேடு, கரூர், தாந்தோன்றிமலை போன்ற பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், நில அதிர்வு காரணமாக தாந்தோன்றிமலை, கருப்பக்கவுண்டன்புதூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவுகள் தானாக மூடிக்கொண்டது. இதையடுத்து வீட்டில் இருந்த பெண்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலஅதிர்வு மற்றும் வெடி சத்தத்திற்கு காரணம் தெரியாமல் பொதுமக்கள் தடுமாறினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல வெடி சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

பருவநிலை மாற்றம் காரணமாக வானில் தற்காலிகமாக உருவாகும் காற்றுப் பந்தின் வெடிப்பு காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.