Tamilnadu
எவ்வளவு நீர் பாய்ந்தாலும் நிரம்பாத அதிசய கிணறு... உண்மை என்ன?
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து மழை வெள்ளப்பெருக்கால் நிமிடத்திற்கு இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் திசையன்விளை வட்டாரத்தில் குளங்கள் நிரம்பின. அதனைத் தொடர்ந்து திசையன்விளையை அடுத்த ஆயன்குளம் படுகை நிரம்பியதுடன், அதன் அருகிலுள்ள ஒரு பாழுங்கிணற்றுக்குள் அணையிலிருந்து செல்லும் தண்ணீர் செல்கிறது.
மழைக் காலம் மற்றும் அணை திறப்பு வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்தக் கிணற்றுக்குள் எவ்வளவு தண்ணீர் சென்றாலும், இந்தக் கிணறு நிரம்பியது கிடையாது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் முழுவதையும் பூமி உள்வாங்குவதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலத்தடி நீர் உயர்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்தக் கிணற்றில் நன்னீர் புகுவதன் காரணமாக இப்பகுதியின் உப்பு நீர் குடிக்கத் தகுந்த தண்ணீராக மாறுகிறது. இது தங்களுக்கு பெரிதும் உபயோகப்படுகிறது என்கிறார்கள் ஆயன்குளம் கிராம மக்கள்.
பெருவெள்ளக் காலங்களில் எத்தனையோ கிணறுகள் நிரம்பினாலும், இந்தக் கிணற்று நிரம்பியதை நாங்கள் கண்டதில்லை. இந்தக் கிணறில் நீர் பாய்ந்தால் எங்கள் விவசாயம் செழிக்கிறது. இந்தக் கிணறு எங்களுக்குக் கிடைத்த அட்சய பாத்திரம் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய கனமழை காரணமாக சுமார் 40 கன அடி தண்ணீர் அந்தக் கிணற்றுக்குள் சென்றபோதிலும், இதுவரை கிணறு நிறையாமல் இருப்பதால் அந்த அதிசய கிணறை சுற்றுப்புற ஊர் மக்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதத்தைத் தடுக்க அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான அபூர்வா, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் அந்தக் கிணற்றை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு, “கிணற்றின் அடிப்பகுதியில் நீர் உறிஞ்சப்படுவதால் எவ்வளவு தண்ணீர் சென்றாலும் கிணறு நிறைவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு 45 நாள்கள் வரை இதுபோல தண்ணீர் சென்றும் கிணறு நிறையவில்லை என அங்குள்ள விவசாயிகள் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
அந்தக் கிணற்றில் தண்ணீர் சென்றால் சுற்றிலும் இருக்கும் 10 கி.மீ தூரத்துக்கு உள்ள விவசாய கிணறுகள் நீராதாரம் பெறுவதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்து அவர்களை ஆய்வு நடத்தச் சொல்லியிருக்கிறேன். அதன் முடிவுகள் கிடைத்த பின்னர், அங்கு நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்துப் பரிசீலிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!