Tamilnadu
ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 437 பேரில் எவருக்கும் பாதிப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் நல்ல செய்தி
தென்ஆப்பிரிக்கா ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேருக்கும், மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேருக்கும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என்று உறுதியானது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் ஹரிஹரன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர்.
எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவு கட்டுவோம் என்பது இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்தாக தமிழக அரசு மேற்கொண்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேடைப்பேச்சு:
1988ஆம் ஆண்டு தொடங்கி டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதியை மேம்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் 2001ஆம் ஆண்டுக்கு முன்னர் எய்ட்ஸ் தாக்கத்தின் விழுக்காடு 1.13% ஆக இருந்தது. தற்போது, 0.18% ஆக குறைந்துள்ளது. இந்திய அளவில் 0.24% ஆக உள்ளது. தேசிய விழுக்காட்டை விட தமிழகத்தில் குறைவாக உள்ளது. துறையின் நிர்வாகிகள், மருத்துவர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் இதற்கு காரணம்.
55 இடங்களில் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 174 இடங்களில் இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு, சிகிச்சைக்காக உள்ளது.
எய்ட்ஸை தடுக்க 85 வகையான இலக்கு பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஸ்பாஸ், விதவைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 21ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,000க்கும் கீழ் உள்ளது. தொற்று நோயை காட்டிலும், தொற்றா நோய்க்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 15 நாட்களுக்குள் இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 609 மருத்துவமனைகளில் விபத்தால் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழகத்தில் ஒரு கோடியே 13 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. வீடு தேடி தடுப்பூசி திட்டம் மக்களிடையே வரவேற்கப்பட்ட திட்டம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். வீரியம் அறிந்து தடுப்பூசியை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டெல்டா வைரஸால் மே மாதத்தில் ஆக்சிஜன் தேவைப்பட்டோர் 90% மேல் இருந்தனர். அதைவிட ஒமைக்ரான் தீவிரமாக இருக்கும் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று இரவு முதல் தமிழகத்தில் விமான நிலையங்களில் தென்னாப்ரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வந்த எண்பத்தி எட்டு பேருக்கும் மற்ற நாடுகளிலிருந்து வந்த 50 பேருக்கும் என மொத்தம் 437 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றார்.
தொடர்ந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழாவில் கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!