Tamilnadu

“கனமழையால் சேதமான பகுதிகளில் ஆய்வு - மக்களுக்கு நிவாரணம்” : தொடர்ந்து களத்தில் நிற்கும் முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.11.2021) வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை (30.11.2021) சென்னை, செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட அப்பகுதிகளுக்கு நடந்து சென்று, அப்பகுதி மக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் மழைநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, செம்மஞ்சேரி, குமரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கோவிட் தடுப்பூசி முகாம்களை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர், ஒக்கியம் மேட்டில் உள்ள காரப்பாக்கம் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

முன்னதாக, நேற்று (29.11.2021) செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, குட்வில் நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அக்குடியிருப்புப் பகுதியை பார்வையிட்டார். உடனடியாக அங்கு தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு ஆணையிட்டதன் அடிப்படையில் மின்மோட்டார்களைக் கொண்டு தேங்கியிருந்த மழைநீர் அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அங்கு நீர்வடிய வைக்கப்பட்டது.

பின்னர், இன்று (30.11.2021) காலை அப்பகுதி மக்களுடன் முதலமைச்சர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது நிலைமை சீர் செய்யப்பட்டதா எனக் கேட்டறிந்தார். உடனடி நடவடிக்கைக்காக அப்பகுதி பொதுமக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Also Read: “தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின்!