Tamilnadu

“தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்தது தமிழ்நாடு அரசு” : ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் பெருமிதம்!

மக்களுக்கு விழிப்புணர்வை இன்னும் விரைவுப்படுத்தவேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் சாதனை படைத்துள்ளது என்று ‘தினகரன்’ நாளேட்டின் தலையங்கத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள், தற்போது ஆர்வமாக போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் அடிக்கடி பேசி, கூடுதல் தடுப்பூசி பெற்றுக்கொடுத்துள்ளார். கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல், மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. தினசரி பாதிப்பு 800-க்குள் அடங்கிவிட்டது. கடந்த 23-ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் முதல் டோஸ் தடுப்பூசி 4.40 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது. இது, 76 சதவீதம் ஆகும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி 2.31 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது. இது 40 சதவீதம் ஆகும். மாவட்டம் வாரியாக ஒப்பிடுகையில் காஞ்சிபுரத்தில் முதல் டோஸ் 100 சதவீதம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 45 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு, இம்மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் முதல் டோஸ் 91 சதவீதம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 55 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு 2வது இடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் முதல் டோஸ் 89 சதவீதம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 45 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு 3-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 120 கோடியை நெருங்கியுள்ளது. அதாவது, நேற்று முன்தினம் நிலவரப்படி 119.38 கோடியை கடந்துவிட்டது. வரும் டிசம்பருக்குள் 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை, இந்தியா, கடந்த அக்டோபர் மாதமே எட்டிவிட்டது. புதிய மைல்கல்லை எட்டிய இந்தியாவுக்கு, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து, இந்திய சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் முயற்சிகளால், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 151 நாட்களாக 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.33 சதவீதமாக உள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டாலும், மக்களிடம் இன்னும் நூறு சதவீதம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதாவது, முதல் டோஸ் போட்டவர்கள், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதில் ஆர்வம் செலுத்துவதில்லை. 75.83 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என தமிழக அரசின் சுகாதாரத்துறை புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. தடுப்பூசி தொடர்பான புரிதல்களையும், விழிப்புணர்வையும் மக்கள் ஏற்படுத்திக்கொண்டால் 100 சதவீதம் இலக்கு என்பது மிக எளிதாகும். கொரோனா தொற்று முற்றிலும் நீங்கி, உயிரிழப்பும் அடியோடு குறையும்.

Also Read: “நம்மை காக்கும் 48.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் கருணையை காட்டுகிறது”: ‘தினத்தந்தி’ தலையங்கம் பாராட்டு!