Tamilnadu
Whatsapp-ல் “Hi” அனுப்பினால் போதும்... பெண் குழந்தைகள் புகாரளிக்க அவசர எண்ணை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!
சென்னையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க அவசர எண்ணை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயாராணியின் அன்பான வேண்டுகோள்.
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் மன வேதனைக்குரிய செயலாகும். பாலியல் வன்முறை செய்யக்கூடிய நபரே மிகவும் தவறிழைத்தவர், தண்டனைக்குரியவர் மற்றும் குற்றவாளியாவார். ஆகவே, பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் எந்த விதத்திலும் தங்களுக்குள் குற்றவுணர்வினை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
எனவே, உங்கள் மீதோ அல்லது உங்கள் தோழிகள் மீதோ பாலியல் வன்முறை நிகழ்த்துபவரை அறிந்தால் நீங்கள் அச்சப்படவோ, மனவேதனையடைந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கோ போகவேண்டிய அவசியமில்லை. நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். உங்களுக்குத் தேவை சரியான ஆலோசனை மற்றும் முதலுதவி மட்டுமே என்பதை நீங்கள் உணர வேண்டும்.
ஒருவேளை உங்கள் மேல் பாலியல் வன்முறை நடந்தால் தாயிடமோ அல்லது நம்பிக்கைக்குரியவரிடமோ தெரியப்படுத்தி அவர்களது உதவியை நாடுங்கள். அவர்கள் உங்கள் ரகசியத்தைப் பாதுகாத்து உங்களைக் காப்பவராக இருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் உதவியையோ நாட விரும்பினால் தயக்கமின்றி எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கென உங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட இலவச அவசரத் தொலைபேசி எண் 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பும், ஆலோசனையும் வழங்க நாங்கள் காத்திருக்கின்றோம். நீங்கள் 1098 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கும்போது உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் உங்களைப் பற்றிய விவரங்கள் யாரிடமும் பகிரப்படமாட்டாது.
நீங்கள் எங்களோடு பேச விரும்பினால் 99406 31098 என்ற எண்ணின் Whatsapp வாயிலாக “Hi” என்ற குறுஞ்செய்தியை மட்டுமே அனுப்பினால் போதுமானது, நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் தேவையை அறிந்து உதவி செய்கிறோம்.
நம் சென்னை மாவட்டத்தில் உங்களுக்காக விரைந்து வந்து உதவி செய்ய நானும், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்களும் தயாராக இருக்கிறோம். இந்தத் தகவலை நீங்கள் தவறாமல் உங்களின் நண்பர்களுக்கும் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் சென்னை மாவட்டத்தைக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகுந்த மாவட்டமாக உறுதி செய்திடுவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!