Tamilnadu
தி.மு.க.வின் முகவரியே மாநில சுயாட்சிதான்.. “நாயகன் மு.க.ஸ்டாலின்” என சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!
“நாயகன் மு.க.ஸ்டாலின்!” எனும் தலைப்பில் - வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
"ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், சாமானிய மக்கள் பயணிக்கும் பேருந்துகளில், ஆட்டோவில் ஏறி பயணிப்பது, உள்ளூர் ரேஷன் கடையில் புகுந்து திடீர் ஆய்வு மேற்கொள்வது, மாநிலத்தின் கடைக்கோடியில் இருக்கும் யாரோ ஒருவருக்கு நேரடியாக, ‘நான் சி.எம். பேசுறேன்’ என ஃபோனில் பேசுவது, எங்கோ மூலையில் இருக்கும் ஒரு குக்கிராமத்தின் காவல் நிலையத்துக்கு முதலமைச்சரே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது, மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களோடு மக்களாய் நிற்பது, இவையெல்லாம் சினிமாக்களில் மக்கள் முதலமைச்சர் கேரக்டருக்கான ‘மாஸ்’ காட்சிகள்.
கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை அந்த ‘மாஸ்’ முதலமைச்சர், சினிமாவில் மட்டுமே இருந்தார். ஒரு முதலமைச்சர் இப்படிச் செய்தார் என்றால் ‘’எந்தப் படத்துல வர்ற சீன்?’’ என்பார்கள். ஆனால், மே 7ஆம் தேதிக்குப் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு சீனே வேறு. கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு முதலமைச்சரை டி.வி, பேப்பர், பேனர், போஸ்டரில் மட்டுமே பார்த்து வந்த தமிழ்நாட்டு மக்கள், தங்கள் ஊரில், தெருவில், வீட்டு வாசலில் ஏன், தங்கள் வீடுகளுக்குள் அமர்ந்து பேசுவதைப் பார்க்க, கேட்க ஆரம்பித்தார்கள்.
“ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?” என மீடியாக்களே ஆச்சர்யப்படும் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறின. முதலமைச்சரின் கான்வாய் சாலையோரம் ஒதுங்கி நிற்க, மருத்துவ மனைக்குச் செல்லும் ஒரு சாமானியனின் ஆம்புலன்ஸ் வேகம் எடுத்து முதல்வர் காரை முந்திச் செல்கிறது. சென்னையில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 6 ஆம் தேதி இரவு தொடங்கியது. 7ஆம் தேதி காலை, முதலமைச்சர் வடசென்னையில் மழை பாதித்த இடங்களில் மக்களோடு மக்களாக நின்ற படங்களை, வீடியோக்கள் பார்த்துதான், இரவு அவ்வளவு கனமழை பெய்திருக்கிறது என்பதே தமிழக மக்களுக்குத் தெரிந்தது.
விடாது பெய்தது மழை, ஆனாலும் ஓய்வில்லாமல் சென்னையை சுற்றிச் சுழன்றார் முதலமைச்சர். சென்னையில் மழை விட்டதோ இல்லை, முதலமைச்சரின் கார், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் என தமிழகத்தின் மற்ற பகுதிகளை நோக்கிப் பறந்தது. மழை வெள்ளம் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், கோஷம் போட்டவர்கள், கோபம் கொண்டவர்கள் என அனைவரையும் களத்தில் எதிர் கொண்டார் முதல்வர்.
“எப்படியாச்சும் காப்பாத்துங்க சி.எம்.” என சேலத்தில் இருந்து ஒரு சிறுமி உதவி கேட்டு வீடியோ வெளியிடுகிறார். அவர் உதவி கேட்ட வீடியோ - வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என பரவும் முன், அந்தக் குழந்தையை, சுகாதாரத் துறை அமைச்சர், நேரில் சந்தித்து, எல்லா உதவிகளும் செய்த பின், முதலமைச்சரும் இரண்டு முறை அந்தச் சிறுமியைச் சந்தித்து உதவிய வீடியோ பரவி விடுகிறது.
அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள் நேரடியாக குப்பைத் தொட்டிக்குள் போய்விடும் என்ற காமெடி நீண்ட நெடுங்காலமாக தமிழ் சினிமாவில் உண்டு. “இவ்ளோ கும்பல்ல, நாம குடுக்குற மனுவ பிரிச்சுக் கூட படிக்க மாட்டாங்கப்பா” என மக்களே பேசிக் கொள்வார்கள்.
ஆனால், ஆட்சியில் இல்லாதபோது தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்ட லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்களுக்கு, முதலமைச்சர் ஆனபின் தனித்துறை உருவாக்கப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அப்படிதான் மேட்டூர் அணையை திறக்கச் சென்ற முதலமைச்சரிடம், சௌமியா என்ற பெண்ணும் மனு அளித்தார்.
“தன் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள், மூவரும் படித்த பட்டதாரிகள். ஆனால் வேலை யில்லாமல் இருக்கிறோம்” என மனு அளித்திருந்தார். அந்த மனு முதல்வர் கைகளுக்குச் சென்ற இரண்டே நாட்களில் அமைச்சர், சௌமியாவின் வீட்டுக்கே நேரில் சென்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
“எங்களை கோயில் அன்னதானத்துல சாப்பிட விட மாட்டேங்கிறாங்க” என நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினி கோபம் கொப்பளிக்க மீடியாவில் பேட்டி கொடுக்க, அடுத்த நாள் துறை அமைச்சரின் கார், அந்தப் பெண் வீட்டுக்குப் பறக்கிறது. அவருடன் சமபந்தியில் அமர்ந்து அன்னதானம் சாப்பிடுகிறார் அமைச்சர்.
“சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு” - எனச் சொன்ன முதலமைச்சர், அடுத்த சிலநாட்களில் தீபாவளி நாளில், தானே நேரில் அஸ்வினி வீட்டுக்குச் செல்கிறார். அன்று அஸ்வினிக்கு மட்டும் அல்லாமல், அவர் பகுதியில் இருந்த பலருக்கும் வீட்டு மனைப்பட்டா, ரேஷன் அட்டை என முதல்வர் கையால் நலத் திட்டங்கள் கிடைத்தன அறநிலையத்துறை என்பது உண்டியல் வரவு செலவு பார்க்கும் துறை அல்ல என பல புரட்சிகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன.
கொரோனாவால் தமிழகமே முடங்கிப்போய்க் கிடக்க, அறநிலையத்துறை மூலம் எல்லா அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் இலவச உணவு விநியோகிக்கப்பட்டது. அறநிலையத்துறை சார்பில் முதலமைச்சரின் தொகுதியிலேயே கல்லூரி கட்டி, கல்வி வழங்கப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் மீண்டும் கோயில்களுக்கே வந்து கொண்டிருக்கின்றன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், கோயில்களில் தமிழில் அர்ச்சனை என இந்துகளின் விரோதி என குற்றம் சாட்டப்படும் தி.மு.க. தான், இந்துகளுக்குப் பாதுகாப்பாக, இந்து கோயில்களுக்கு அரணாக இருக்கிறது.
மக்களுக்கு ஒரு தேவை என்றால், அவர்கள் அரசிடம் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, மக்களைத் தேடி அரசு, என்ற தலைகீழ் நிலையை உருவாக்கியிருக்கிறார் முதலமைச்சர். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என அரசு இயந்திரம் மொத்தமும் மக்களை நோக்கிச் செல்கிறது.
கடந்த பத்தாண்டுகளாக முதலமைச்சர் என்பவர், கோட்டையில் அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்பவர் என்ற நிலைமையை மாற்றி, சேப்பாக்கத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ரேஷன் கடையில் முதலமைச்சர் நிற்கிறார். சாலை வசதியே இல்லாத வத்தல் மலை பழங்குடியின மக்களை வரலாற்றில் முதல் முதலமைச்சராக நேரில் போய்ப் பார்க்கிறார்.
குக்கிராமங்களில் இருக்கும் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி, மாணவர்களுக்கான சத்துணவுக் கூடம் என எதுவும், முதலமைச்சரின் ஆய்வில் தப்பவில்லை. அரசின் முக்கியமான திட்டங்கள், தலை மைச் செயலகத்திலும், முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பெரிய மேடைகளிலும் துவங்கப்பட்ட காலங்கள் போய், ‘வருமுன் காப்போம்’, ‘இல்லம் தேடி மருத்துவம்’, ‘இல்லம் தேடி கல்வி’ என மக்களுக்கான திட்டங்கள், மக்களிடம் இருந்தே துவக்கப்படுகின்றன.
தி.மு.க.வின் முகவரியே மாநில சுயாட்சிதான். எல்லா மாநிலங்களிலும் ‘மேட் இன் இந்தியா’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, தமிழ்நாட்டில் மட்டும், ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற பேரலை வீசத் தொடங்கியிருக்கிறது. “அனைவருக்கும் கல்வி - இதுவே திராவிட இயக்கத்தின் கொள்கை. திராவிட இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே அதற்குதான்” என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, அந்த இடஒதுக்கீட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, உறை விடம் என, ‘அந்த மாணவன் பட்டம் பெறும் வரை அனைத்தும் இலவசம்’ என அறிவித்தார்.
இந்தியாவுக்கு காவி பெயிண்ட் அடிக்கும் வேலையை பா.ஜ.க. தீவிரமாகச் செய்யும் சூழலில்தான், பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என, மொத்தத் தமிழ்நாட்டையும் “பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சமூக நீதி உறுதிமொழி எடுக்க வைத்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை தமிழ் நாட்டில் மட்டும்தான் - வாக்கிங் போகும் போது நீங்கள் சந்தித்துப் பேசலாம், வீட்டுக்கு அருகில் இருக்கும் டீ கடையில் சந்தித்து செல்ஃபி எடுக்கலாம். உங்கள் குறைகள் அடங்கிய மனுவோடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குச் சென்றால், அங்கே முதலமைச்சரே உங்கள் மனுவை வாங்கிப் படிப்பார்.
“இனி மக்களுக்கான முதலமைச்சர்” என சினிமாவில் ‘மாஸ்’ சீன் வைக்கவேண்டும் என்றால், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘ரெஃபரன்ஸ்’ இல்லாமல் காட்டமுடியாது என்ற அளவுக்கு, கடந்த ஆறே மாதங்களில் அத்தனை மாஸ் காட்சிகளை, தரமான சம்பவங்களை அரங்கேற்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.'' இவ்வாறு அந்தக் காணொலியில் ‘கணீர்’ குரலில் கருத்து மழை பொழிகிறது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!