Tamilnadu

“சபாநாயகர் அப்பாவுவின் கருத்துகள் நாளைய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்” : குவியும் பாராட்டு!

சட்டப்பேரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயித்தல் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவுவின் கருத்துக்கள் நாளைய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இமாச்சல பிரதேசம் சிம்லாவில் 2021 நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ‘அகில இந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், தமிழகச் சட்டப் பேரவைத் தலைவர் மாண்பமை அப்பாவு அவர்கள் நிகழ்த்திய உரை, சரித்திர முக்கியத்துவம் பெற்றதாகத் திகழ்கிறது.

இதுவரை யாரும் எழுப்பாத சட்ட நுணுக்கம், அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல், அதற்குரிய சட்ட ரீதியான தீர்வு, இந்தியாவின் ஜனநாயக மாண்புகள் சீரடைய வேண்டிய அவசியம் போன்றவை பற்றிய கருத்துக்களை மிகச் சிறப்பாக விளக்கியிருப்பது எல்லாருடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகியிருக்கிறது. 1921 முதல் இன்றுவரை தொடரும் நூறாண்டு காலத்திய தமிழக சட்ட மன்றத்தின் தனிச்சிறப்பு பற்றிப் பேசப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைகள், ஆளுகிற அரசின் எண்ணப் பிரதிபலிப்பாகவும், அதன் விருப்பத்தை நிறைவேற்றும் அவையாகவும் அதன் அதிகாரத்திற்கு ஒப்புதல் முத்திரை வழங்கும் இடமாகவும் கருதுவது சரியன்று. மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை உணர்ந்து, அவர்களின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் எல் லோருடைய சமூக நீதிக்கும் சமநீதிக்கும் சட்டம் செய்யும் ஜனநாயக மன்றம் ஆகும்.

அண்மைக் காலத்தில் சட்டப் பேரவைகள், மெஜாரிட்டி என்னும் போர்வையில், அமளி நடத்தப்படுவதும், விவாதம் எதுவுமின்றி மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதும், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இடங்களாகி வருகின்றன.

நீதிமன்றங்களின் தலையீடு அதிகரித்து, சுதந்திரமாகவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டும் நடக்கும் படியான நடைமுறைகளுக்கு தடைவிதிப்பது போன்றதொரு நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள், ஒப்புதல் தரப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. ஆளுநரின் ஒப்புதலோ, மறுதலிப்போ, ஜனாதிபதி அவர்களுக்கு பரிந்துரைப்பதற்கோ ஒரு கால நிர்ணயம் குறிப்பிடாமல் இருப்பதால்தான் காலவரை யறையின்றி கிடப்பில் போடும் நிலை நீடிக்கிறது.

ஆளுநர் ஒப்புதல் தரலாம்; அல்லது மறுதலிக்கலாம். மறுதலிப் பதற்குரிய காரணங்களைத் தெரிவித்தால், நிறைவேற்றப் பட்டுள்ள மசோதாக்களில் காணும் குறைபாடுகளைக் களைந்து, திருத்தி, புதிதாக நிறைவேற்றி அனுப்பமுடியும். இந்த மசோதாகள் பற்றிய தெளிவான முடிவினை உரிய காலத்திற்குள் தெரிவிக்காமல் ஆளுநர் காலம் கடத்துவது, மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காத போக்கு எனவும், ஜனநாயகச் சீர்குலைவு எனவும், எதேச்சதிகாரப் போக்கிற்கு இடமளிக்கக் கூடியது எனவும் மிகத் தெளிவாக பேரவைத் தலைவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்.

சட்டப் பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஏற்பு அல்லது மறுப்பு என்பதைத் தெரிவிப்பதற்கு ஆளுநர்களுக்குச் சட்டப் பூர்வமான கால நிர்ணயம் விதிப்பது ஜனநாயகத்திற்குப் பேருதவியாக அமையும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவது சமீப காலத்தில் பெருகி வருகிறது. இத்தகையவர்களின் தகுதி இழப்புகள் குறித்து முடிவு செய்வதில் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. கட்சி மாறுவோர் மீது விரைவான நடவடிக்கை எடுப்பது ஜன நாயக பாதுகாப்பது ஆகிறது.

பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களின் உரையில் எடுத்துக் காட்டியுள்ள கருத்துக்கள் யாவும் நாட்டு மக்களும் சட்ட வல்லுநர்களும் ஆழ மாகச் சிந்தித்து, அதற்குரிய சட்டரீதியான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்துகின்றன.

இந்திய ஜனநாயகம் நீடித்து, நிலைத்து உல கிற்கு அழகியதோர் வழிகாட் டியாகத் திகழ்ந்திட வேண்டும் என்னும் உன்னத இலட்சிய நோக்கத்துடன் இந்த அரிய உரையை பேரவைத் தலைவர் வழங்கியிருக்கிறார். உயர்ந்த சிந்தனைச் செல்வரைத் தமிழகச் சட்டப் பேரவைத் தலைவராகத் தமிழகம் பெற்றிருப்பது மிகுந்த வாழ்த்துக்கும் பாராட் டுக்கும் உரியதாகும். மாண்பமை அப்பாவு அவர்களின் கருத்துக்கள், நாளைய வரலாற்றில் பொன் னெழுத்துக்களில் எழுதப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.” எனக் கூறப்பட்டுள்ளது.

Also Read: “சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காவிட்டால்..”: அப்பாவு கருத்துக்கு வைகோ ஆதரவு!