Tamilnadu
அதிமுகவால் ஆனந்தவாடி மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதி; பெற்று கொடுத்த திமுக - இதுதான் தளபதி ஆட்சியின் மாட்சி!
அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடியில் அரசு சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்காகக் கிராம மக்களிடம் நிலம் பெறப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க, கிராமத்தில் இருப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது.
ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், வெளிவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்தது. இதைக் கண்டித்து ஆனந்தவாடி கிராம மக்கள் நீண்ட காலமாகப் போராடி வந்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது. பின்னர் இந்த பிரச்சனை குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு ஆனந்தவாடி கிராம மக்கள் கொண்டு வந்தனர்.
பின்னர் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இந்த பிரச்சனையில் தலையிட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைப் பரிசீலனை செய்து ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குப் பணி ஆணையை வழங்கியுள்ளனர்.
தி.மு.க அரசின் இந்த துரித நடவடிக்கைக்கு ஆனந்தவாடி கிராம மக்கள் முலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த பணி ஆணைக்கான பின்னணி கதை குறித்து அமைச்சர் சிவசங்கர் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் விவரம் வருமாறு:-
"தம்பி, நீங்க கொடுங்க"
"இல்லண்ணா. நீங்க தான் கொடுக்கணும்"
"இதுக்கு நீங்க தான் போராடுனீங்க. அதனால நீங்க கொடுக்கறது தான் சரி"
தொழிற்துறை அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் எனக்குமான உரையாடல். பணி ஆணையை என் கையில் கொடுத்து வழங்கச் சொன்னார்.
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை துவங்கிய போது, மூலப் பொருளான சுண்ணாம்புக் கல் எடுக்க ஆனந்தவாடி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு சிமெண்ட் அலையில் வேலை வழங்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. நீண்ட காலமாக இந்த கோரிக்கை இருக்கிறது. ஆனால் பணியிடங்கள் பெரிய அளவில் இல்லை அப்போது.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 40க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல் வந்தது. ஆனந்தவாடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தி.மு.க கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தோம். உடனே ஆலை நிர்வாகத்தினர் ஆனந்தவாடி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் சரியான பதில் இல்லை. ஆனந்தவாடி மக்கள் சென்னை சென்று அன்றைய தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் மனு கொடுத்தார்கள். தொடர் போராட்டத்திற்கு பிறகு, அமைச்சர் எம்.சி.சம்பத் அரியலூரே வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் சம்பத் உத்தரவாதம் அளித்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
அடுத்த நாள் பணி நியமன பட்டியல் வெளியானது. ஆனந்தவாடியை சேர்ந்த யார் பெயரும் இல்லை. பெரும்பாலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு பணம் வாங்கிக் கொண்டே அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக ஆனந்தவாடி மக்கள் கொந்தளித்தனர்.
அமைச்சர் சம்பத்தை சந்தித்தார்கள். அவர் "எனக்கு ஏதும் தெரியாது" என்றார். ஆலையில் இருந்த அதிகாரிகள் சென்னை அலுவலகத்தை கைகாட்டினர்கள். சரியான பதில் யாரும் சொல்லவில்லை. முடிவு, ஆனந்தவாடி மக்களுக்கு ஏமாற்றம்.
ஆனந்தவாடி மக்களுடன் இணைந்து மீண்டும் போராடினோம். மக்கள் தூக்குக்கயிறு போராட்டம் வரை சென்றார்கள் . போராட்டம் வலுத்த பிறகு ஆலை நிர்வாகத்தினர் ஒரு படி இறங்கி வந்தனர். ஆனந்தவாடியை சேர்ந்த 44 பேருக்கு பணி வழங்கினர், ஆனால் அது நிரந்தர பணி அல்ல, தற்காலிக ஒப்பந்த பணி. முதலில் உள்ளே நுழைந்தால் போதும் என ஒப்புக் கொண்டோம்.
முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, சில பணியிடங்களுக்கு நேர்காணல் வந்தது. நேர்காணல் சென்னை தலைமை அலுவலகத்தில் என்ற உடன் மக்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. சுரங்கத்தின் வாயிலில் போராடத் துவங்கி விட்டனர்.
தகவலை தொழிற்துறை அமைச்சர் அண்ணன் தங்கம். தென்னரசு அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றேன். "மக்களிடம் போராட வேண்டாம் என்று சொல்லுங்கள். அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவாக எடுப்போம்", என்றார். முதல்வர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிந்து, மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஆணை வந்தது.
மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆனந்தவாடி கிராமத்திற்கே சென்று நிலைமையை விளக்கி உறுதி அளித்தார். போராட்டத்தை கைவிட்டனர்.
அண்ணன் தங்கம்.தென்னரசு அதிகாரிகளை அழைத்து, "மக்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்", என்று கூறினார். முன்னர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அனில் மேஷ்ரம் அவர்கள் தான் இப்போது டான்செம் எம்.டி . அவரும் இந்தப் பிரச்சினையின் தன்மையை உணர்ந்தவர்.
நேர்காணலில் கலந்து கொண்டவர்களில் தகுதி உள்ள ஆனந்தவாடியை சேர்ந்த மூவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2006- 2011 தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் ஆனந்தவாடியை சேர்ந்த 7 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு இப்போது தான். இப்போது அ.தி.மு.க ஆட்சி இருந்திருந்தால், இந்த பணிகளும் வெளியாருக்கு தான் விற்கப்பட்டிருக்கும்.
இன்று "நிரந்தரப் பணிக்கான ஆணையை" வழங்கினார் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள். அப்போது தான் துவக்கத்தில் இருக்கும் உரையாடல்.
எல்லோருக்கும் பணி வழங்க வேண்டுமென சிலர் அரியலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தகவல் வந்தது. அண்ணன் தங்கம் தென்னரசு கோபப்படாமல், "இது துவக்கம் தான். தகுதி உள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என சொல்லுங்கள்" என்றார். அது தான் அண்ணன் தங்கம்.
2007 ஆம் ஆண்டு அண்ணன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர். நான் ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். மணப்பத்தூர் பொதுமக்கள் அவர்கள் ஊர் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவில்லை என வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். அவர்களை அண்ணனிடம் அழைத்துச் சென்றேன். சிரித்துக் கொண்டே," அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் உங்களை சங்கர் அழைத்து வந்துள்ளார். உங்கள் உணர்வை மதிப்பவர்கள் நாங்கள். காரணம், தலைவர் கலைஞர் வழிநடப்பவர்கள் நாங்கள். அடுத்த வருடம் உங்கள் பள்ளியை தரம் உயர்த்தி தருகிறோம்", என்றார் அண்ணன் தங்கம் தென்னரசு. அடுத்த வருடம் சொன்னதை செய்தார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கூட தி.மு.கவுக்கு கொடுக்காத கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பின் உச்சத்தில் இருந்த போது, நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தவர் முதல்வர் தளபதி அவர்கள். நேற்றும் கோவை சென்று 15,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர். வாக்களிக்காதவர்கள் நலனிலும் அக்கறை செலுத்தும் முதல்வர். எதிர்த்து போராடுபவர்களையும் மதிக்கும் அமைச்சர்.
இது தான் தலைவர் தளபதி ஆட்சியின் மாட்சி !” இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!