Tamilnadu

காற்று மாசினை குறைக்க சென்னை மாநகராட்சியின் பசுமைப் பயணம் : திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

எழில்மிகு சென்னை மாநகரின் காற்று மாசினை குறைக்கும் விதமாக சென்னையில் உள்ள உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாசற்ற பசுமைப்பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி காற்று மாசினை குறைக்கும் விதமாக செயல்படும் சிறந்த உயர்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து (ECOmmute Schools) நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்தான விரிவான தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பசுமைத்திட்டத்தில் சிறப்பாக பங்குபெறும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழும், பள்ளிகளுக்கு விருதும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சென்னை மாநகரில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் பங்குபெற ஊக்குவிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அவர்களை வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சைக்களில் வரும் பள்ளி மாணவர்கள் தலைகவசம் (Helmet) அணிந்து வர வேண்டும் எனவும், தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் படை மாணவர்களைக்கொண்டு பள்ளிகளுக்கு அருகாமையில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாணவர்கள் பாதுகாப்பாக வருவதற்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வண்ணம் சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஒத்துழைப்பு நல்கி கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் அவர்களையும் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி

1. காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும் மாணவர்கள் நேரம் என குறிப்பிட்டு போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

2. மாணவ மாணவியர்களின் பள்ளிக்கருகாமையில் தற்காலிக மிதிவண்டி பாதை அமைத்து மாணவர்கள் நேரம் என குறிப்பிட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

3. மாணவர்கள் நேரத்தின்போது வாகனம் இல்லா தெருவென சில சாலைகளை அறிவித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

4. பள்ளிக்கு அருகாமையில் பாதுகாப்பான நடைபாதை அமைத்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், விபரங்கள் வாரிய இணையதளத்தில்கொடுக்கப்பட்டுள்ளது: www.tnpcb.gov.in

மேற்குறிப்பிட்ட மாசில்லா பசுமைப்பயணம் திட்டம் பற்றிய செய்தி அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்து சென்னை மாநகரின் காற்று மாசினை குறைப்பதற்கு அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் ஒத்துழைப்பு நல்கி இதில் பங்குகொள்ள வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Also Read: “எனக்கு வாழத் தகுதியில்ல.. மன்னிச்சிடுங்க”: ஆன்லைன் ரம்மியால் ரூ.5 லட்சம் இழந்த இளைஞர் விபரீத முடிவு!