Tamilnadu

“குழந்தைகளுக்கு எதிரான உரிமைமீறல்.. ஈஷாவிற்கு எதிராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவு” : ஐகோர்ட் அதிரடி!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ஈஷா யோகா மையத்தின் நிர்வாகி கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஈஷா யோகா மையம் தரப்பில் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு தேவையான ஆங்கிலம், கணிதம், அடிப்படை வேதம் ஆகியவற்றை குருகுல கல்வி மூலம் கற்பிப்பதாகவும், அர்ப்பணிப்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தங்கள் மையத்திற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பபட்டதாகவும், அதை மதித்து குறிப்பிட்ட தேதியில் அனைத்து விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் விசாரணைக்கு ஆஜரான நிலையில், தங்களை விசாரிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆணையத்தின் தரப்பில் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு, விசாரணையை முறையாக நடத்தாததால் நீதிமன்றத்தை நாடியதாகவும், அதனடிப்படையில் சம்மனை ரத்து செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது. ஆணையம் தரப்பில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வரும்போது அதில் சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படும்போது, கேள்விக்குறியாகும்போதும் அதன் மீதான புகாரில் விசாரணை மேற்கொள்ளவோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கவும், அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும், அதுபோன்று அனுப்பப்படும் சம்மனை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சம்மன் அனுப்பும் அமைப்பிற்கு அதிகாரம் இல்லாதபட்சத்திலேயே வழக்கு தொடரமுடியும் எனவும் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஆணையம் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு சம்மன் அனுப்பியதால் வழக்கு தொடர்ந்ததாக ஈஷா யோகா மையத்தின் தரப்பில் வாதிடப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, நியாயமான, நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார். சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

அதேசமயம் புதிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு மீண்டும் நான்கு வாரங்களில் சம்மன் அனுப்ப ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதற்கு உரிய ஆதாரங்களுடன் இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க ஈஷா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார். விளக்கங்களைப் பெற்ற பின் ஈஷா அறக்கட்டளைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Also Read: “சிறாரை துன்புறுத்தி வாய்வழி புணர்வது மோசமான பாலியல் வன்முறையாகாது” : தண்டனையை குறைத்து சர்ச்சை தீர்ப்பு!