Tamilnadu

பொன்னேரி அரசு மருத்துவர் அனுரத்னா விவகாரம்.. நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பொன்னேரி அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் அனுரத்னாவின் கருத்தைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்த மருத்துவர் அனுரத்னா அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின. மருத்துவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக மாவட்ட மருத்துவ இணை இயக்குனாரால் பழிவாங்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வந்த செய்தி அடிப்படையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். பின்னர் சமூக வலைதளங்களில் பரவிய மருத்துவர் அனுரத்னா பணி மாறுதல் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் சாந்தி ஆகியோருடன் சம்பவம் குறித்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சமுக வலைதளங்களில் பரவி வந்த மருத்துவர் அனுரத்னா விவகாரம் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நேரில் விசாரணை செய்தேன். அனுரத்னா பணியிடைநீக்கமெல்லாம் செய்யப்படவில்லை. அருகே உள்ள கட்டிடத்திற்கு தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார். அது பதவி உயர்வே தவிர குறைவானது அல்ல.

மருத்துவர் அனுரத்னாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அவரது கருத்தையும் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது புகார்கள் குறித்து நிர்வாக ரீதியாக தீர்வுகாணப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: "பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!