Tamilnadu
கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்கள்: முக்கிய அம்சங்கள் இதோ!
கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 4,723 கோடி ரூபாய் முதலீட்டில் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. ரூ.34,723 கோடி முதலீட்டில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
2. ரூ.485 கோடி முதலீட்டில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் 7 நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 1,960 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
3.ரூ.3928 கோடி முதலீட்டில் 10 நிறுவனங்களில் புதிய திட்டங்கள் தொடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3,944 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
4.13 நிறுவனங்களுக்கு புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.13,413 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 11,681 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
5.ஒற்றைச்சாளர இணையம் 2.0 ன் கைபேசி செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கைவைத்தார். முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், இக்கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6. 2021-22 ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு ஏதுவாகவும், மேம்பட்ட நிதிநுட்ப (Fintech) நிறுவனங்களின் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்திடும் வகையிலும் "தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021'' யை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில், "தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து, ஆறு மாத காலத்தில் இது மூன்றாவது முதலீட்டாளர்கள் மாநாடு, மூன்றாவது முறையாக நடக்கின்ற மாநாடு.
மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். செப்டம்பர் மாதத்தில் ஒரு ஏற்றுமதியாளர் மாநாட்டை நடத்தினோம். இதோ நவம்பரில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு நடந்திருக்கிறது. இதே வேகத்தில் போனால் - இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம், நிச்சயமாக பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.
நான் பல நேரங்களில், பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். பல மாநில முதலமைச்சர்களை எல்லாம் ஒப்பிட்டு ஒரு கணக்கீடு எடுத்து ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அதில் நம்பர் 1 முதலமைச்சராக என் பெயரை அறிவித்திருக்கிறார்கள். இது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, எங்களுடைய அமைச்சரவைக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, இந்த அரசுக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாகத்தான் நான் கருதுகிறேன். என் பெயரைச் சொல்லி நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் என்னுடைய லட்சியம்.
வான்வெளி, பாதுகாப்புத் துறை தொடர்பான பொருட்கள் உற்பத்தியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் தொடர்பான பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, நமது மாநிலத்தில் கோவையை ஒரு முனையமாக வைத்து, வான்வழி மற்றும் பாதுகாப்புத் தொழில் பெருவழித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடக்கூடிய வகையில், இந்தத் துறையில் உலக அளவில் வலுப்பெறும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?