Tamilnadu

விபத்தில் சிக்கிய பெண்ணை உடனடியாக மீட்டு முதலுதவி அளித்த தி.மு.க எம்.எல்.ஏ: எண்ணூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னை திருவொற்றியூர் காசி கோயில் குப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்த பெண்ணை அவ்வழியாகச் சென்ற திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பட்டினப்பாக்கத்தை சேர்ந்த சாந்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எண்ணூர் விரைவு சாலை காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் அருகே, சென்னை துறைமுகத்தில் மாதவரம் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.

இதில் தலைகுப்புற விழுந்த பெண் ரத்த காயங்களுடன் துடிதுடித்தார். இந்நிலையில் அவ்வழியாக வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் சிக்கிய பெண்ணை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

பின்னர் விபத்து ஏற்படுத்தி தப்பிச்சென்ற கண்டைனர் லாரி ஓட்டுநரை போக்குவரத்து போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் சிக்கிய பெண்ணை ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திராமல் தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்.எல்.ஏ.,வின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றது.

Also Read: “எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது” : கொலையாளிகள் சிக்கியது எப்படி?