Tamilnadu

யார் அந்த 4 பேர்..? 4 ஆண்டுகளில் 4 கோடி ஊதியம் பெற்ற ஸ்மார்ட் சிட்டி ஆலோசகர்கள் - ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்!

அ.தி.மு.க ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், அப்போதைய அமைச்சர்களுக்கு வேண்டியவர்களை ஆலோசகர்களாக நியமித்து பல கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளது.

ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் ரூ.17 ஆயிரத்து 590 கோடி மதிப்பிலான, 624 திட்டங்களை நிறைவேற்ற, ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதில், 250க்கும் குறைவான திட்டங்களே முடிக்கப்பட்டுள்ளன.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பலநூறு கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, இந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், 4 பேருக்கு 4 ஆண்டுகளில், 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது ஆர்.டி.ஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் துவக்கப்பட்டபோது, மாநகராட்சி சார்பில் ஆலோசகர்கள் சிலர் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாறிய பின், கடந்த ஆகஸ்ட் மாதம்தான் மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்துக்கான ஆலோசகர்கள் யார் யார், அவர்களுக்கு தரப்பட்டுள்ள ஊதியம் தொடர்பான பல்வேறு தகவல்களையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் பெற்றுள்ளார்.

அதில், 2018ஆம் ஆண்டில் நிர்வாக ஆலோசகர்களாக நியமித்ததிலிருந்து, 4 ஆண்டுகள் தரப்பட்ட ஊதிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான்கு பேர்தான், குழுவின் தலைவர், நகர்ப்புற கட்டமைப்பு வல்லுனர், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனர், போக்குவரத்து வல்லுனர் என்ற நான்கு பொறுப்புகளில், 2018ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அப்போது குழுத் தலைவருக்கு மாதம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 592 ரூபாயும், கட்டமைப்பு வல்லுனருக்கும், போக்குவரத்து வல்லுனருக்கும் தலா 2 லட்சத்து 79 ஆயிரத்து 870 ரூபாயும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனருக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 148 ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது.

இதற்காக மாதத்துக்கு 11 லட்சத்து 19 ஆயிரத்து 480 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 760 ரூபாயும் ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி., தொகையுடன் சேர்த்து செலவிடப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளில், குழுத் தலைவரைத் தவிர, மற்றவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களில் குழுத் தலைவருக்கு இறுதியாக மாதாந்திர ஊதியம் 3 லட்சத்து 41 ஆயிரத்து 278 ரூபாயும், போக்குவரத்து, கட்டமைப்பு வல்லுனர்களுக்கு தலா 3 லட்சத்து 26 ஆயிரத்து 440 ரூபாயும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனருக்கு 3 லட்சத்து 11 ஆயிரத்து 603 ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது.

அதாவது, இந்த நான்கு ஆலோசகர்களுக்கு மட்டும், நான்கு ஆண்டுகளில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் ஊதியமாக, ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், ஆலோசகர்களுக்கு உண்மையிலேயே இவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டதா, அவர்களின் பணி என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Also Read: 2016-21 மார்ச் வரை; மதுரை சிறையில் ரூ.100 கோடி முறைகேடு - RTI மூலம் அம்பலமானது அ.தி.மு.கவின் மெகா ஊழல்!