Tamilnadu

கோடிக்கணக்கில் விலைபோகும் ‘அம்பர்கிரிஸ்’ : திமிங்கலத்தின் எச்சங்களுக்கு இவ்வளவு மவுசா? - என்ன காரணம்?

தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் அம்பர்கிரிஸை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அரசு விதிகளின்படி அம்பர்கிரிஸ் உள்ளிட்ட கடலில் கிடைக்கும் அரியவகைப் பொருட்கள் மற்றும் எச்சங்களை வனத்துறையிடரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அம்பர்கிரிஸை கண்டெடுத்த மீனவர்கள் அவ்வாறு செய்யாமல் அதனை வீட்டிலேயே வைத்து, அவற்றை விற்பனை செய்யவும் முயன்றுள்ளனர்.

இதனையடுத்து குற்றப்புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையிலான போலிஸார் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை விற்க முயன்ற மீனவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸை கைப்பற்றினார்கள்.

சரி, இவ்வளவு விலையில் அம்பர்கிரிஸ் விற்கப்படுவது ஏன் - அம்பர்கிரிஸ் என்றால் என்னவென்று பார்ப்போம்..!

திமிங்கலத்தின் வாந்தியை அம்பர்கிரிஸ் என்கிறார்கள். திமிங்கலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒருவகையான திடக்கழிவே இந்த அம்பர்கிரிஸ் ஆகும்.

திமிங்கலம் கடலில் உள்ள பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்ணும். அப்போது பீலிக் கணவாயின் ஓடு திமிங்கலத்திற்கு செரிமான பிரச்சனை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த ஓடுகள் திமிங்கலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும்.

இந்த ஓட்டின் மூலம் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டாமல் இருப்பதாக, திமிங்கலம் அந்த ஓட்டைச் சுற்றி ஒருவகையான திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதனையே அம்பர்கிரிஸ் என்கிறார்கள்.

இந்த அம்பர்கிரிஸ் நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கான மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது கடலின் மேற்பரப்பில் மிதந்து மேலேவரும்.

அவ்வாறு மேலே மிதக்கும் போது சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து அந்த திரவப் பொருளை திடப்பொருளாக உருவாக்குகின்றன. இதன் வடிவமைப்பு வட்டம் மற்றும் நீட் வட்ட வடிவில் காணப்படும். மேலும் வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படும்.

முதலில் இந்த அம்பர்கிரிஸ் கெட்ட நாற்றத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல உலர்ந்த பிறகு அது நறுமணமாக மாறும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த அம்பர்கிரிஸ் கடலில் கலந்து மிதந்து பல நாட்கள் சில சமயம் பல ஆண்டுகள் கூட கடந்து, கரையை வந்தடைவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவை பல ஆண்டுகளாக வாசனை திரவியம் மற்றும் மருந்துப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவை ஆயுர்வேதத்தைத் தவிர, யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்னைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இவை கிடைப்பது மிகவும் அரிது. இதனால் இதன் விலை பல கோடி ரூபாய் வரை செல்கிறது. அதுமட்டுமல்லாது இதனைக் கடல் தங்கம் என்றும் மிதக்கும் தங்கம் என்றும் அழைக்கின்றனர்.

Also Read: வாடகைக்கு வீடு தேடிய இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த புரோக்கர்... மும்பையில் நடந்தது என்ன?