Tamilnadu
“புகார் குழு முதல் உளவியல் ஆலோசகரின் விழிப்புணர்வு வரை”: பெண் குழந்தைகளை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள்!
கோவை மாவட்டத்தில் அனைத்துப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், சமூக ஆர்வலர், உள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரி மற்றும் பள்ளி மாணவியர்களின் பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு உள்ளூர் புகார் குழு (INTERNAL COMPLAINT COMMITTEE) அமைக்கப்படவேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணாக்கர்களது பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றிய முழு விவரங்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும் எனவும் அவர்கள் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும் இல்லை என்பதையும், பள்ளி வாகனங்கள் சரியான முறையில் இயங்கக்கூடிய நிலையில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்தல் வேண்டும். பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டி காலவதியாகதவாறு உரிய தேதிகளில் புதுப்பித்தல் செய்வதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு பள்ளிப் பேருந்திற்கும் ஓட்டுநருடன் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நடத்துநர் கட்டாயம் நியமிக்க வேண்டும் எனவும் மாணவிகள் பயணம் செய்யக்கூடிய பள்ளிப் பேருந்தாக இருப்பின் கண்டிப்பாக பெண் நடத்துநர் நியமிக்கப்படவேண்டும் என அறிவித்துள்ளார். தனியார் வாகனம் மூலம் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் சார்பாக, தனியார் வாகனம் தொடர்பான விவரங்கள் பெற்றோர் கூட்டத்தில் தகவல் பெற்று (தனியார் வாகன ஒட்டுநர் பெயர்/தொலைபேசி எண்/வாகன எண்./வழி) பள்ளியில் தனி பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் தனியார் வாகனங்களில் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்போது எழக்கூடிய இடர்ப்பாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்த அறிவுரைகளை தங்கள் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாக வழங்க வேண்டும் எனவும் சிறப்பு வகுப்பு முடிந்து அனைத்து மாணாக்கர்களும் 5.30 மணிக்குள் பள்ளியிலிருந்து வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைப்பதை பள்ளி முதல்வர் உறுதி செய்து கொண்டு பின் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் பள்ளியை விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதோடு பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் கேமராக்கள் தொடர்ந்து இயங்குவதை பள்ளி முதல்வர் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பள்ளி வாகனங்களில் அவசரகால வழி இருப்பதை உறுதி செய்ய வேண்டும், மாணவ/மாணவிகளுக்கான Online (LD) offline வகுப்புகளுக்குரிய வருகைப்பதிவேடு பராமரித்தல் வேண்டும். மாணவிகளுக்கு online வகுப்புகள் எடுக்கும் பொழுது பெண் ஆசிரியர்கள் உடன் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாகம் online வகுப்புகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளியால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு ஆசிரியர் அவ்வப்போது கண்காணித்தல் வேண்டும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் போது சார்ந்த மாணவ/மாணவிகளை கட்டாயப்படுத்துதல் கூடாது.
உரிய மாணாக்கர்களின் பெற்றோர்களிடம் இசைவு கடிதம் பெற்ற கோப்புகளில் பராமரிக்க வேண்டும். மேலும் சிறப்பு வகுப்புகள் காலை 08.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான இடைப்பட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு சிறப்பு வகுப்புகள் நடத்தும் போது மாணாக்கர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகமலும் மற்றும் உடல் நலன் பாதிக்காத வண்ணம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்..
மேலும் அனைத்துப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், சமூக ஆர்வலர், உள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரி மற்றும் பள்ளி மாணவியர்களின் பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு உள்ளூர் புகார் குழு (INTERNAL COMPLAINT COMMITTEE) அமைக்கப்படவேண்டும் எனவும் பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சார்ந்து புகார் அளிப்பதற்கு புகார் பெட்டி வைத்தல் வேண்டும்.
புகார் பெட்டி இரு சாவிகள் கொண்டதாகவும் அதில் ஒன்றினை மூத்த பெண் ஆசிரியரிடமும் மற்றொன்றை மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது மாவட்ட இலவச சட்ட ஆணையத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் அனைத்து மாணாக்கர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறியும் வகையில் மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய கண்காணிப்பாளரது அலைபேசி எண் மற்றும் அலுவலக முகவரி தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.
பள்ளிகள் செயல்படும் இடத்திற்கு அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் பெண் காவல் ஆய்வாளர், குழந்தைகள் நலக் காவல் ஆய்வாளராக செயல்பட்டு வருகிறார். எனவே அன்னாரது தொலைபேசி எண்ணினை பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டியிருத்தல் வேண்டும். குழந்தை உதவி மையத்திலிருந்து பெறப்படும் தங்கள் பள்ளி தொடர்பான புகார்களுக்கு துரித நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை உடனடியாக தொலைபேசி மூலமும், குழந்தை உதவி மையம்.
சார்ந்த வட்டக்கல் அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு கடிதம் மூலமும் தெரிவிக்க பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு பள்ளிகளில் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது Good touch and Bad touch தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தி மாணாக்கர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.
உளவியல் ஆலோசகர் மூலம் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர் - வகுப்பாசிரியர் கூட்டம் (Parent-Class Teacher Interaction) சீரான கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும். பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவுகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மாணவ, மாணவியரின் இணைய வழி வகுப்புகளை நிறுத்தி வைக்க கூடாது என்றும், மேற்காண் காரணத்தினால் எவ்வித உடல் ரீதியான/மன ரீதியான தண்டனைகள் வழங்கப்படக் கூடாது எனவும் கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஆசிரியர்களுக்கு உரிய கல்வித் தகுதிகளை பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அன்னார்களது கல்வி சான்றுகள் சுய ஒப்பமிட்ட நகல் பெற்று கோப்பு பராமரிப்பதுடன், அதற்கான பதிவேடு பேணப்பட வேண்டும். ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு தினசரி சரிபார்க்கப்பட்டு முதல்வர்கையொப்பமிட வேண்டும். வருகைப்பதிவேடு தொடர்பாக மாத தணிக்கைகளுக்குட்படுத்தி உரிய முறையில் பராமரிக்கப்படவேண்டும். ஆசிரியர் அனைவருக்கும் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
ஏதேனும் ஆசிரியர்கள் தனது பள்ளிப் பணியை விட்டு விலகினால், அன்னார் பள்ளியை விட்டு விலகிய நாள் குறித்த விவரம் அன்னாரது பெயருக்கெதிரே சிவப்பு மையினால் எழுதப்பட்டு, அன்னார் பணி விலகியதற்கு ஆதாரமாக பணிவிலகல் ஆணை வழங்கி அல்லது சார்பு செய்து அதன் அலுவலக நகல் பள்ளியில் கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பணியேற்ற நாள் மற்றும் பணி விலகிய நாள் குறித்த பதிவேடும் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?