Tamilnadu

“வாபஸ் பெற்றால் போதாது... உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுங்கள்” : விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர்,

கடந்த ஆண்டு நம்பவர் 6ஆம் தேதி துவங்கிய விவசாயிகளின் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. டிராக்டர் பேரணி, சாலை மறியல் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணித்து வந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கியது மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக இன்று காலை காணொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை கூறுகையில், “பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேவேளையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன் கூறும்போது, "வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஓராண்டு காலப் போராட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டத்தைத் தொடக்கத்திலேயே அரசு திரும்பப் பெற்றிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் நேரிட்டிருக்காது. விவசாயிகள், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்காது.

இருப்பினும், அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கும் அதேவேளையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான புதிய மின் திருத்தச் சட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: “வரலாறு காணாத மாபெரும் வெற்றி..” : 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு!