Tamilnadu
மாமாவிடம் உள்ள பணத்தை பறிக்க ஆதவன் பட பாணியில் பலே திட்டம்; கடத்தல் நாடகமாடிய கும்பல் சிக்கியது எப்படி?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஹசேன் (52). இவர் ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து ஆம்பூர் பஜார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்த விற்பனை செய்து வருகிறார்.
மேலும் இவரது சகோதரி மகனான ஹமீத் (27) அவரது மாமாவான ஹசேனுடன் இணைந்து வெங்காய விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மு.க.கொல்லை பகுதியில் உள்ள வீட்டில் இருந்து ஹமீத் அருகாமையில் உள்ள மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹமீதின் மாமாவான ஹசேனை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஹமீதை கடத்தி உள்ளதாகவும் 10 லட்சம் ரூபாய் பணத்தை தராவிட்டால் ஹமீதை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ஹமீதின் உடம்பில் கத்தியால் கிழித்து இரத்த காயங்களுடன் இருப்பதை போல படங்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி உள்ளதாக கூறி மிரட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன ஹசேன் இதுகுறித்து ஆம்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். உடனடியாக ஆம்பூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களை பிடிக்க திட்டமிட்டனர்.
இதனையடுத்து பணத்தை தருவதாக ஹசேனை கடத்தல்காரர்கள் வரச் சொன்ன இடத்திற்கு காவல்துறையினரும் சாதாரண உடையில் பின் தொடர்ந்து சென்று ஆம்பூர் அடுத்த மாதனுர் பகுதியில் கடத்தல் கும்பலை துப்பாக்கி முனையில் காரோடு சேர்த்து மடக்கி பிடித்தபோது தனது மாமாவான ஹசேனிடம் உள்ள பணத்திற்காக ஆசைப்பட்டு ஹமீது தனது நண்பர்களை வைத்து தன்னையே கடத்தியதாக நாடகமாடியது கண்டறியப்பட்டது.
கடத்தல் நாடகமாடிய ஹமீதின் நண்பர்களான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த முகமது சித்திக், பையாஸ், அபீத், அப்ரீத் மற்றும் ஹமீத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் சென்று கொண்டிருந்த வெங்காய வியாபாரி ஹசேன் மீது ஹமீதீன் நண்பர்கள் சித்திக் மற்றும் அப்ரீத் ஆகியோர் மிளகாய் பொடி தூவி ஹசேனை கடத்த முயன்றதாகவும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஹசேனை கடத்த முயன்றது தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பணம் பறிக்க திட்டம் தீட்டி தன்னை கடத்தி விட்டு தனது மாமாவிற்கு போன் செய்து மிரட்டலாம் என திட்டம் தீட்டியபடி நேற்றிரவு வீட்டிலிருந்து மருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுடன் காரில் ஏறி ஆம்பூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று தனது மாமாவிற்கு போன் செய்து கடத்தி விட்டதாக மிரட்டல் விடுத்ததுள்ளனர்.
பின்னர் அசேன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் அடுத்த கட்டமாக ஹமீது தனது கையில் பிளேடால் கிழித்து கொண்டு கையில் வெட்டி விட்டதாக கூறி படமெடுத்து ஹசேனுக்கு அனுப்பி மிரட்டியதும் பின்னர் பணம் கொடுப்பதாக கூறியவுடன் 10 லட்சத்துடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவைத்த நிலையில் எதிர்பாராத விதமாக போலீசார் மறைந்து வந்து பிடித்து விட்டதாகவும் ஹமீது கூறியது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து பணத்திற்காக தனது மாமாவிடம் கடத்தல் நாடகமாடி திட்டம் தீட்டிய ஹமீது மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!