Tamilnadu

ரூ. 17 லட்சம் மோசடி செய்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர்.. முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை புரோக்கர் செல்வகுமார் மூலமாக பெற்று ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மணி மீது இரண்டு பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், பணமோசடி செய்த மணி மீது மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்பதால் இவருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என்று தெரிவித்தார்

இதை பதிவு செய்தகொண்ட நீதிபதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் உதவியாளர் மணியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Also Read: அரசு வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.2 கோடி மோசடி.. அ.தி.மு.க பெண் நிர்வாகியை கைது செய்த போலிஸ்!