Tamilnadu
“மழைநீரை அகற்றி நிவாரணம் வழங்க அதிரடி நடவடிக்கை - தனி முத்திரை பதித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்”: தினத்தந்தி
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை அகற்றி - நிவாரண உதவி அளித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பணிகள் தனி முத்திரையைப் பதித்துள்ளன என ‘தினத்தந்தி’ நாளேடு 13.11.2021 தேதியிட்ட இதழில் ‘மழைநின்றது பணிகள் காத்திருக்கின்றன!’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு :-
பொதுவாக பருவமழை காலங்களில், கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், அதன்பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவாகி, இறுதியில் புயலாக மாறி, காற்றும், மழையுமாக கொண்டுவரும். இந்த மழைதான் ஆண்டு முழுவதும் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் கைகொடுக்கும் என்றாலும், அளவுக்கு மீறும்போது பல சேதங்களை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுகிறது.
இந்த ஆண்டு கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால், திடீரென தென்கிழக்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறாவிட்டாலும், தாழ்வு மண்டலமாக 5 நாட்களுக்கு மேல் கண்ணாமூச்சி காட்டிவிட்டு கரையை கடந்தது. கடந்த வாரம் சனிக்கிழமை இரவில் இருந்தே சென்னை மாநகரிலும், பல மாவட்டங்களிலும் நல்லமழை பெய்துவந்தது. பல இடங்களில் கனமழை பெய்து மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த மழையினால், சென்னை மாநகரில் மக்களின் இயல்புவாழ்க்கையே பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. தண்ணீர்.. தண்ணீர்.. எங்கும் தண்ணீர்.. என்றவகையில், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாகவே மாறிவிட்டது. மழையினால் 14 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் 1½ லட்சம் ஏக்கர் அளவுக்கு நெல் பயிர்களும், வேறு பயிர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக உத்தேசமாக ஒரு கணக்கு கூறுகிறது. எவ்வளவு பாதிப்பு? என்று துல்லியமாக கணக்கிட, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளார். இதுதவிர, மழை சேத நிவாரணப்பணிகளை கவனிக்க ஆங்காங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டும் மழையிலும் முழங்கால் அளவுக்குமேல் தேங்கியிருந்த தண்ணீரிலும் நடந்துசென்று நிவாரணப்பணிகளை கவனித்துவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணி நிச்சயமாக மெச்சத்தகுந்தது. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறை, காவல் துறை, மின்சார வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, வருவாய்த்துறை, மத்திய-மாநில பேரிடர் மீட்பு துறைகள் உள்பட அரசு அதிகாரிகள் அனைவரும் பம்பரமாக சுழன்று பணியாற்றினர். இதுவரை முதல்-அமைச்சர்களாக இருந்த கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எல்லோருமே மழை பாதிப்பு நேரங்களில் தண்ணீருக்குள் நடந்து சென்று பணிகளை கவனித்தார்கள் என்றாலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கும்.. எப்போதும்.. காலையும், மாலையும், தினமும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்துசென்று மழைநீரை அகற்றவும், நிவாரணப் பணிகளை ஆற்றவும் மேற்கொண்ட பணிகள் தனி முத்திரையை பதித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிடுகிறார் என்ற செய்தி விவசாயிகளுக்கு மனநிறைவு தருகிறது.
கடந்த வார ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அவரது பணி மழைவிட்டும் முடியவில்லை. மழை நின்றுவிட்டது, இனிமேல்தான் அடுத்துவரும் காலங்களில் பல பணிகள் காத்திருக்கின்றன. ஆண்டுதோறும் மாநில பட்ஜெட்டிலும், சென்னை மாநகர பட்ஜெட்டிலும், தமிழக அரசும், மாநகராட்சியும், மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஏராளமான நிதியை ஒதுக்குகிறது. இவ்வளவு நிதியை ஒதுக்கியும், மழைநீர் வடிகால் பணிகள் முறையாக செய்யப்பட்டிருந்தால், இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது என்ற மனக்குறை மக்களிடம் இருக்கிறது. இனி, அரசு கவனத்தில் கொள்ளவேண்டியது, இவ்வாறு மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க ஒரு நீண்டகால தீர்வை நிறைவேற்ற வேண்டியதுதான். பயிர்கள் சேதத்தையும் தவிர்க்க, போதிய வடிகால் வசதி ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கவேண்டும். இதுபோல, பாதிப்பு விவரங்களை விரிவாக கணக்கிட்டு மத்திய அரசாங்கத்திடம் நிவாரணத்தொகை பெற அறிக்கை அனுப்பும் பொறுப்பும் காத்திருக்கிறது.
மழை வெள்ள சேதம் இனி ஏற்படாமல் இருக்க, என்னென்ன எதிர்கால பணிகளை அரசு மேற்கொள்ளலாம் என்பதையும் ஆராயவேண்டும். இனிதான் வடகிழக்கு பருவமழையின் தீவிரகாலம் வருகிறது. அடுத்துவரும் மழையின்போது சேதம் ஏற்படாமல் தடுக்க, உரிய வகையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !