Tamilnadu
“சுயமரியாதை - சமூக நீதியை பாதுகாப்பதே திராவிட இயக்கத்தின் பணி என பறைசாற்றிய முதல்வர்” : தினத்தந்தி !
ஏழை என்றும் அடிமை என்றும் எவரும் இல்லை சாதியில்; இழிவு கொண்ட மனிதரென்பது தமிழ்நாட்டில் இல்லையே என்பதை இலக்காகக் கொண்டு மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என 12.11.2021 அன்று ‘தினத்தந்தி’ தலையங்கத்தில் இது நடமாடும் கோவில் திருப்பணி, என முதல்வர் அவர்களைப் பாராட்டியுள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
பண்டிகைகள் என்பது, நாம் கொண்டாடி மகிழ்ச்சியடைவதைப்போல, மற்றவர்களையும் மகிழ்ச்சியடைய செய்வதுதான். எல்லா பெரிய தலைவர்களும், மதங்களும் அந்த தத்துவத்தைத்தான், வழிகாட்டும் விளக்காக தெரிவிக்கின்றன. அந்தவகையில், கடந்த தீபாவளி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் தீபாவளி கொண்டாடாவிட்டாலும் ஏழை இருளர், நரிக்குறவர்கள் வீடுகளுக்கு சென்றதோடு மட்டுமல்லாமல், அந்த கிராமத்திலுள்ள இந்த இன மக்களுக்கு பல்வேறு உதவிகளை வாரிவாரி வழங்கி எல்லோரையும்விட அதிகமான மகிழ்ச்சியில் தீபாவளி தினத்தன்று திக்குமுக்காட செய்துவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோவிலில் நடந்த அன்னதானத்தில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண், தன் கைக்குழந்தையுடன் மற்றவர்களோடு சேர்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லை என்று கூறியதை கேள்விப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அந்த பெண்ணை மட்டுமல்லாமல், அந்த கிராமத்திலுள்ள அந்த சமூகத்தை சேர்ந்த மற்றவர்களையும் அழைத்து அவர்களுக்கு அன்னதானம் வழங்கி, தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அந்த பெண்ணிடம் அவர், “உங்களுக்கு ஏதாவது குறை உள்ளதா?” என்று கேட்டபோது, ஒரு நீண்ட பட்டியலை கூறினார்.
இதை அமைச்சர் சேகர்பாபு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். யாரும் எதிர்பாராத விதமாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் வசிக்கும் பூஞ்சேரி கிராமத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள 282 பேர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதி சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், தொழில் பயிற்சிக்கான ஆணைகள், சிறு தொழில் செய்ய வங்கிக் கடன்கள், கலைஞர் நகர மேம்பாட்டு திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும், “அவர்களின் குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். இதுமட்டுமல்லாமல், எந்தப் பெண்ணுக்கு அன்னதானத்தில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டதோ, அதே அஸ்வினி மற்றும் பவானி ஆகியோர் வீடுகளுக்கு சென்று குடும்பத்தாரிடம் நலம் விசாரித்துவந்த பாங்கு, நிச்சயமாக இருளர் மற்றும் நரிக்குறவர் வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி நன்னாள்.
அந்த கிராமத்து மக்களுக்கு மட்டுமல்லாமல், அடுத்த 2 வார காலத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இருளர் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். சமூகத்தில், விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையையும், சமூக நீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என்று மு.க.ஸ்டாலின் பறைசாற்றியுள்ளார். மறைந்த கருணாநிதி, “நடமாடும் கோவில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது” என்று கூறியதை மு.க.ஸ்டாலின் இப்போது நிறைவேற்றியுள்ளார். இந்த மனிதாபிமான செயலை “மாத்ருபூமி” மலையாள தொலைக்காட்சி மட்டுமல்லாமல், பல்வேறு பத்திரிகைகள், ஊடகங்கள் பெரிதும் பாராட்டியுள்ளன.
யுனஸ்கோ விருது பெற்ற கல்வியாளர்-எழுத்தாளர் அசோக் ஸ்வைன், “ஒரு தலைவர் என்ன செய்ய வேண்டுமோ, அதை மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்” என்று பாராட்டியிருக்கிறார். கவிஞர் வைரமுத்து, நடிகர் சூர்யா-ஜோதிகா என்று எல்லோரும் மு.க.ஸ்டாலினை பாராட்டியிருக்கிறார்கள்.
மகாகவி பாரதியார், “ஏழை என்றும், அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில். இழிவுகொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே” என்று பாடினார் அன்று. ஆனால் இன்று, “ஏழை என்றும், அடிமை என்றும் எவரும் இல்லை சாதியில். இழிவுகொண்ட மனிதரென்பது தமிழ்நாட்டில் இல்லையே” என்பதை இலக்காகக்கொண்டு, மு.க.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார் என தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்த்துகிறது, பாராட்டுகிறது, மகிழ்ச்சியடைகிறது, பெருமைகொள்கிறது.” எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!