Tamilnadu
“‘சொல்லுங்க, என்ன பிரச்சினை?’.. கட்டுப்பாட்டு அறையில் குறைகளை கேட்ட முதல்வர்”: நெகிழ்ந்துபோன சென்னை பெண்!
மழைநீர் தேங்கியதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து பேசினார். அவரிடம் பேசிய சில நிமிடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சென்னை பெண் நெகிழ்ந்து போனார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு!
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி வாயிலாக நேரடியாகக் கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள், புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசிக்கு வந்த அழைப்பை மு.க.ஸ்டாலின் எடுத்து பேசினார். சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணிடம் இருந்து 1070 என்ற எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த பெண், தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதாக புகார் தெரிவித்தார். மறுமுனையில் அழைப்பில் மு.க.ஸ்டாலின் பேசியது கண்டு நெகிழ்ந்து போனார். அந்தப் பெண் தெரிவித்த புகாரை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மிகவும் கருணையோடு பேசினார்!
அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த அழைப்பை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே எடுத்து பேசியது குறித்து அகிலா கூறியதாவது :- “முதலமைச்சர் எனது அழைப்பை எடுத்ததும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான் பேச தயங்கினேன். பரவாயில்லை பேசுங்கள் என்று முதலமைச்சர் கூறினார். மிகவும் கருணையோடு பேசினார். என்ன பிரச்சினை என்று என்னிடம் கேட்டார். நான் தண்ணீர் தேங்கியிருப்பதாக சொன்னேன். கோடம்பாக்கத்தில் நிறைய இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டதே என்று முதலமைச்சர் கூறினார்.
குறிப்பாக ரங்கராஜபுரத்தில் இருந்து விஸ்வநாதபுரம் முதல் தெரு வரை தண்ணீர் வடியவில்லை. டெங்கு காய்ச்சல் வந்து விடுமோ என்ற பயம் இருக்கிறது. மேலும் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், தேங்கிய மழை நீரை வடிய நடவடிக்கை எடுத்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறினேன்.
நான் கண்டிப்பாக செய்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் கூறினார். மழை முடிந்ததும் செய்யட்டுமா? என்று கேட்டார். உடனே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். சரி உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
நான் விடுத்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார் என்று நினைக்க வில்லை. ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. முதல் ஒரு நிமிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. “சொல்லுங்கள் அம்மா, என்ன பிரச்சினை?” என்று கேட்டார். அப்புறம் சிறிது நேரம் சுதாரித்துக் கொண்டு தான் என்னுடைய பிரச்சினையை சொல்ல முடிந்தது. முதலமைச்சரிடம் புகாரை தெரிவிக்கலாமா? வேண்டாமா? என்பதில் தயக்கம் இருந்தது.
முதலமைச்சர் பொறுமையாக என்ன சொல்லுங்கள் என்று கூறினார். சுமார் 3 நிமிடம் என்னிடம் பேசினார். நான் குழுக்களை அனுப்பி வைக்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றார். இந்த மாதிரி பேரிடம் சமயத்தில் ஒருவர் தன்னம்பிக்கையோடு சொல்வதே பெரிய ஆதரவு. அதை செய்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த சில நிமிடங்களிலேயே நடவடிக்கை!
முதலமைச்சர் பேசி முடித்த உடனேயே அதிகாரிகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கும் இடங்கள் தொடர்பான விவரங்களை அவர்கள் கேட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே சம்மந்தப்பட்ட ஊழியர்கள் விரைந்து வந்தார்கள். அவர்கள் தேங்கிய மழைநீரை அகற்றினார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!