Tamilnadu

7 ஆண்டுகளாக வாடகை தராமல் கோயில் சொத்தில் கிளினிக் நடத்திய மருத்துவர்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்!

கோயில் சொத்தில் ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் கிளினிக் நடத்தி வந்த மருத்துவரை அப்புறப்படுத்த பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்தில் கிளினிக் நடத்தி வந்த மருத்துவர் தியாகராஜன், ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறி, அவரை அப்புறப்படுத்த கோயில் செயல் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் தியாகராஜன் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 2013ஆம் ஆண்டு வாடகை செலுத்தவில்லை என மனுதாரரை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டதை அடுத்து, 2014 அக்டோபர் வரையிலான வாடகை பாக்கி 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், 2019ல் தன்னிச்சையாக வாடகையை உயர்த்தியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், 2014 நவம்பர் முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக வாடகையை வழங்காமல் இருந்ததால், மனுதாரரை ஆக்கிரமிப்பாளராக அறிவித்து அவரை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாதவரின் குத்தகையை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஏழு ஆண்டுகளாக ஒரு பைசா கூட வாடகை செலுத்தாமல் கோவில் சொத்தை அனுபவித்த நிலையில், அப்புறப்படுத்தும் உத்தரவை எதிர்க்க எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுவரை அவரை அப்புறப்படுத்தியிருக்காவிட்டால், உடனடியாக கோவில் சொத்தில் இருந்து வெளியேற்றவும், ஏழு ஆண்டு வாடகை பாக்கியை வசூலித்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read: “‘சொல்லுங்க, என்ன பிரச்சினை?’.. கட்டுப்பாட்டு அறையில் குறைகளை கேட்ட முதல்வர்”: நெகிழ்ந்துபோன சென்னை பெண்!