Tamilnadu
மழையின் போதும், வெள்ள பாதிப்புக்கு பின்பும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் என்னென்ன? விவரம் இதோ!
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்டங்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதன்படி, மழை வெள்ளத்தின் போதும், வெள்ள பாதிப்புக்கு பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பொது சுகாதார ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
1. மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார ஆலோசனைகள்
• அனைத்து அரசு மருத்துவ மனைகளும் தேவையான வசதிகள் மற்றும் மருந்துகளுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. பொது மக்கள் இந்த வசதிகளை அவசர தொலைபேசி எண் 104 மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
• மேலும் மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றில் பொது மக்கள் தேவையான சிகிச்சைகளையும் ககாதார ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
• மருத்துவ முகாம்கள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காயமடைந்த நபர்களுக்கு இரணஜன்னி தடுப்பூசி (TT Vaccine) போடப்படுகிறது.
• 24 நேரமும் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. தொற்று நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்
• நீரினால் மற்றும் பூச்சிகளால் பரவும் வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்க அனைத்து தடுப்புநடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
• பொதுமக்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்:
பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல் நலம்
தொற்று நோய் வராமல் தடுக்க, சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரினால் கழுவ வேண்டும்
வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் நிலவேம்பு, கபசரக் குடிநீர் அருந்துதல் நலம்
• எவருக்கேனும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
• எங்கேனும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனை / நடமாடும் மருத்துவக் குழு மற்றும் பொது சுகாதார கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
• குளங்கள் மற்றும் திறந்த வெளி கிணறுகளிலிருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை பொது மக்கள் பார்க்க நேர்ந்தால் உடனடியாக பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாதுகாப்பானது அல்ல.
3. சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் (Boiled Water)
• சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
• குளோரின் அளவு உள்ளாட்சி அமைப்புகளின் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் 2 பிபிஎம் இருக்க வேண்டும். தெரு / வீட்டுக் குழாய்களில் 0.5 பிபிஎம் இருக்க வேண்டும். இதனை சென்னை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
• வீடுகளில் உள்ள மேல் நீர்தேக்கத் தொட்டி / தரை மட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் அளவு இருப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்:
• 1000 லிட்டர் தண்ணீருக்கு 33 சதவீதம் குளோரின் உள்ள தரமான பிளிச்சிங் பவுடரை 4 கிராம் வீதம் ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு பசை போல் ஆக்க வேண்டும்.
• வாளியில் முக்கால் பகுதி அளவிற்கு வரும்வரை தண்ணீர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
• சுண்ணாம்பு மற்றும் பிற வண்டல் முதலானவை வாளியின் அடிப்பாகத்தில் தங்குவதற்காக 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
• பின்னர் தெளிந்த குளோரின் நீரை மற்றொரு வாளியில் ஊற்றி அதை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் நன்கு கலக்க வேண்டும்.
• குளோரின் நன்கு கலந்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை பயன்படுத்தலாம்.
• உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து நீர்கசிவு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
Also Read: வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கே சென்று உணவு... நிவாரணப் பணிகளில் அசத்தும் சென்னை மாநகராட்சி!
4. தரைமட்ட குடிநீர் தொட்டிகள் / மேல் நிலை குடிநீர் தொட்டிகள் மூழ்கிய ஆழ்துளை கிணறுகள், தரைமட்ட குடிநீர் தொட்டிகள், திறந்த வெளிகிணறுகள், ஆகியன சுத்தம் செய்த பின்னரே குடிநீரை சேகரிக்க பயன்படுத்த வேண்டும். இது தொடர்பான படிப்படியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
• பாதிக்கப்பட்ட தரைமட்ட குடிநீர் தொட்டிகளில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட வேண்டும்.
• பிளீச்சிங் பவுடரைக் கொண்டு தரைமட்ட குடிநீர் தொட்டிகள் / மேல்நிலை குடிநீர் தொட்டிகளை நன்கு தேய்த்து கழுவிவிட வேண்டும்.
• நன்கு தேய்த்து கழுவிய பின்னர், தரைமட்ட குடிநீர் தொட்டிகள் / மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.
• மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி தண்ணீரை குளோரினேசன் செய்ய வேண்டும்.
• அசுத்தக் கூறுகள் வெளியில் செல்ல ஏதுவாக எல்லா குழாய்களிலும் தண்ணீரை திறந்து விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்த பின்னர் பயன்படுத்த வேண்டும்.
• இதே போன்று கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
5. வெள்ள நிவாரண தற்காலிக முகாம்களில் நடைபெற வேண்டிய நலவியல் நடவடிக்கைகள்
• தற்காலிக முகாம்களில் கோவிட்-19 தடுப்பு முறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
• தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், முகாமில் வழங்கப்படும் குடி தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும்.
• பொதுமக்கள் கழிவறை வசதிகளை பயன்படுத்த வேண்டும். ஏதேனும் காரணங்களால், அத்தகைய கழிவறை வசதி இல்லையெனில் முகாம் பொறுப்பாளரிடம் தற்காலிக கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரலாம்.
• தற்காலிக முகாம் பகுதிகளில் பினிச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கொண்டு (1:4 விகிதத்தில்) கிருமி நீக்கம் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும்.
6. ஈக்கள் கட்டுப்பாடு நடவடிக்கைகள்
• குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பை மற்றும் அழுகிய பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
• இந்த இடங்களை பிளிச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
7. கொசுக்களை கட்டுப்படுத்துதல்
• டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவைகள் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்புள்ள இடங்களாகும்.
• எனவே மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
• வீடுகளில் நல்ல தண்ணீர் சேரும் இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவேண்டும்.
• உள்ளாட்சி அமைப்புகளுடன் பொது சுகாதார துறை இணைந்து மலேரியா, டெங்கு மற்றும் சிக்கன் குன்யா போன்ற நோய்களை உருவாக்கும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
8. இறந்து போன விலங்குகள் அல்லது பறவைகளை அடக்கம் செய்தல்
• இறந்து போன விலங்குகள் மற்றும் பறவைகளை காண நேர்ந்தால் உடனடியாக மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். அவைகளை ஆழப்பள்ளம் தோண்டி புதைத்து, புதைத்த இடத்தில் பிளீச்சிங்பவுடரை தூவ வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!