Tamilnadu

“வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி - 4 பேர் படுகாயம்” : சேலத்தில் நடந்த சோகம்!

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நண்பகலில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பல்வேறு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில், சேலம் மாநகர் ஒன்பதாவது கோட்டத்திற்குட்பட்ட அல்லிக்குட்டை, மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள முதியவர் ஏழுமலை என்பவரின் ஓட்டு வீட்டின் , மண் சுவர் ஈரப்பதம் காரணமாக இன்று காலை 8 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ஏழுமலையின் பேரன் 5 வயது சிறுவன் பால சபரிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முதியவர் ஏழுமலை மற்றும் அவருடைய மகள் காளியம்மாள், பேத்தி புவனா, பேரன் மாரியப்பன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் நான்கு பேரும் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் மாநகராட்சி ஆணையாளர கிறிஸ்து ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கவனமாக இருக்கக் கோரி அறிவுரை வழங்கினர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவர் ஏழுமலை மற்றும் அவருடைய மகள் காளியம்மாள் உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர்.

Also Read: “CPI பிரமுகரை வெட்டிக்கொன்ற வழக்கில் 5 பேர் கைது - போலிஸார் தீவிர விசாரணை” : பதைபதைக்க வைத்த CCTV காட்சி!