Tamilnadu

கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... எந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. நேற்று மாலை வரை சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்தநிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு அந்தமான் கடலில் உருவாக சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (நவ. 13) தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 15-ஆம் தேதி இந்த கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை சென்னை, திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் நேற்று முதல் கன்னியாகுமரி, நீலகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆறாவது நாளாக அதிரடி ஆய்வு.. மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!