Tamilnadu

“கலைஞருக்காக வாதாடியவர்.. தி.மு.கவிற்கு சட்ட நிபுணர்களை உருவாக்கித் தந்தவர்” : முதல்வர் நேரில் அஞ்சலி!

பல்வேறு வழக்குகளில் கலைஞருக்காக வாதாடி வெற்றிகண்ட மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களின் உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் இன்று காலை சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த வழக்கறிஞரும், முத்தமிழறிஞர் கலைஞரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவருமான என்.நடராஜன் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்கும் மிகுந்த துயரத்திற்கும் உள்ளானேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் நிபுணராக விளங்கிய நடராஜன் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர். கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை தனது வாத திறமையால் சட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து நீங்காப் புகழ் பெற்றவர்.

நீதித்துறைக்கு மட்டுமின்றி, கழகத்திற்கும் அனுபவமிக்க சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல வழக்கறிஞர்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரிய அவர், நீதியரசர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு வாதாடிய அவர், வழக்கறிஞர் தொழிலுக்கான நேர்மை அறிவுக்கூர்மை, நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர்.

சட்ட நிபுணத்துவம் நிறைந்த சட்ட அனுபவத்தின் இமயமாக விளங்கிய நடராஜனின் மறைவு நீதித்துறைக்கும் கழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.