Tamilnadu

"ஏற்கெனவே வசூலிச்சத வச்சுக்கோங்க; இனி வசூலிக்க கூடாது" - மெட்ரோ நிர்வாகத்துக்கு ஐகோர்ட் அதிரடி ஆணை!

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் முக கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் பத்திரிக்கை செய்திக் குறிப்பை வெளியிட்டது.

இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றி உள்ளதாகவும், அந்த சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அறிவிப்பை அமல்படுத்துவதற்கான அதிகாரிகள் எவரையும் குறிப்பிடவில்லை என்றும், கடந்த செப்டம்பர் 13 ம் தேதி வரை 87ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகையை மாநில கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரோ ரயில் சட்டப்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களும் இந்த அபராதத்தை விதிப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அறிவிப்பு நல்ல நோக்கமாகவும், பொது நலனை கருத்தில் கொண்டு இருந்தாலும்கூட, அதற்கு சட்டத்தில் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும் என்றும், சட்ட அதிகாரம் பெறாத இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

ஏற்கனவே வசூலித்த அபராததொகையை மெட்ரோ ரயில் நிறுவனம் வைத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனர்.