Tamilnadu

டிஸ்சார்ஜ் ஆகவேண்டியது ஆனா சிக்கிட்டோம்; வெள்ளத்தில் தவித்த தாய், சேய் & 17 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன பெண் மற்றும் குழந்தையையும், அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்த 17 பேரையும் ரப்பர் படகு மூலம் மீட்டனர் தீயணைப்பு துறை வீரர்கள்.

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மழை நீர் அதிக அளவில் புகுந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு புளியந்தோப்பு கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி வயது 21 மற்றும் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவகாமி வயது 30 ஆகிய இரண்டு பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது.

இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தண்ணீர் மிக அதிகமாக இருந்ததால் அவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து செம்பியம் தீயணைப்பு துறை மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற செம்பியம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் செல்வன் மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பால நாகராஜ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும் அங்கு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 17 பேரை மீட்டு கொண்டு வந்து கரையில் சேர்த்தனர். மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக அவர்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

Also Read: வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்... விரைந்து மீட்ட சென்னை போலிஸ் : குவியும் பாராட்டு!