Tamilnadu
முல்லைப் பெரியாறு குறித்து அவதூறு.. பகைமையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயலும் அ.தி.மு.க - பா.ஜ.க!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு - கேரள அரசுகளின் இணக்கமான நடவடிக்கைகள் தொடரும்போது, பகைமையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் நடவடிக்கையை நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள், விவசாயிகள், ஜனநாயக சக்திகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் தேனி மாவட்டக் குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அணையில் நவம்பர் 10ஆம் தேதி வரை தற்காலிகமாக 139.5 அடி வரை தேக்க உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து நீர்வரத்தின் அடிப்படையில் தமிழக பகுதியில் அதிகபட்சமாக எடுக்கப்படும் தண்ணீர் போக, எஞ்சிய தண்ணீர் கேரள பகுதிகளுக்கு திறந்துவிடப்பட்டது. நீர்திறப்பு தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், அரசின் சார்பில் விளக்கமான அறிக்கை வெளியிட்டும், நேரில் ஆய்வு செய்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தி.மு.க.,வை எதிர்ப்பதற்கு அ.தி.மு.க.,விற்கு வேறு எந்த பிரச்சனையும் கிடைக்காத காரணத்தால் தற்காலிகமாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்று தெரிந்துகொண்டே அடிப்படையற்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துவது திசைதிருப்பும் வேலையாகும். பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டவேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து கேரள வனத்துறை மரங்களை அகற்ற அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக தமிழக முதல்வர், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைக்கு மட்டும் இயக்கம் நடத்த அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் முயன்று வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அரசு தான் முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம் தந்தது.
அதுபோல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 142 அடி நீர் தேக்கப்பட்டது இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் தான் என்பதை மக்கள் அறிவார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை எதிர்த்தும் கடந்த 11 மாதங்களாக வீரம்செறிந்த போராட்டம் நடைபெறும்போது எந்தவித கருத்தும், ஆதரவும் தெரிவிக்காத விவசாய அமைப்புகள், தி.மு.க, மார்க்சிஸ்ட் கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டும் போராடுவது நியாயமா என்பதை மக்கள் உணர்ந்து அவர்களின் சூழ்ச்சி அரசியலுக்கு பலியாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!