Tamilnadu

"விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்": மாநிலம் கடந்து குவியும் பாராட்டு!

விளிம்பு நிலை மக்களின் துயர் துடைத்தும் அவர்களின் வாழ்வா தாரம் மேம்படவும் நற்பணிகள் செய்து வரும் தமிழக முதல்வர் மாநிலம் கடந்து நாடு முழுக்க பாராட்டப்பட்டு வருகிறார் என தினகரன்’நாளேடு 6.11.2021 தேதியிட்ட இதழில் ‘ஆதரவுக்கரம் நீட்டிய முதல்வர்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு, மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் முழுநேர தொழிலாக உள்ளது.

இவர்கள், கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி அங்குள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட சென்றபோது, சிலரால் விரட்டியடிக்கப்பட்டனர். இதனால், மனவேதனை அடைந்த நரிக்குறவ சமுதாய பெண் அஸ்வினி, தனது மனக் குமுறலை வெளியிட்டார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கவனித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலுக்கு நேரடியாக சென்றார். எந்த அன்னதான கூடத்தில் உணவு மறுக்கப்பட்டதோ, அதே அன்னதான கூடத்தில் அஸ்வினி மற்றும் அவரது சமுதாய மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்த விவகாரம், தமிழக முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. உடனே அவர், அப்பகுதி மக்களுக்கு ஒரு வாரத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, மின்கம்பம் அமைத்தல், குடிநீர் குழாய் பொருத்துதல், புதிய சாலைகள் அமைத்தல் என அரசுத்துறை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பூஞ்சேரி கிராமத்தின் தோற்றத்தையே மாற்றி விட்டனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரி கிராமத்துக்கு சென்றார். நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் என 283 பேருக்கு ரூ.4.53 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதை பார்த்து அச்சமுதாய மக்கள் நெகிழ்ந்து போயினர். அன்று குரல்கொடுத்த அதே அஸ்வினி, இன்று முதல்வருக்கு, மேடையிலேயே நன்றி தெரிவித்து உணர்ச்சி பொங்க பேசினார். புதிதாக தயாரித்த ஊசி, பாசிமணி மாலையை முதல்வருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

நலத்திட்ட உதவி வழங்கியது மட்டுமின்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் சமுதாய வீடுகளுக்குச் சென்று, அவர்களின் வாழ்வாதார நிலையை நேரில் பார்வையிட்டார். சிறிது நேரம் அங்கு அமர்ந்து பேசிவிட்டு சென்னை திரும்பினார். எந்த முதல்வரும் காட்டாத பரிவை மு.க. ஸ்டாலின் காட்டியதால், நரிக்குறவர் இன மக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் விட்டனர். ‘தமிழக முதல்வர் எந்த ஆதரவும் இல்லாமல் தவித்த எங்கள் சமுதாய மக்களுக்கு, வீட்டு மனைபட்டா, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டைன்னு எல்லாத்தையும் கொடுத்துட்டு போறாரு. எங்களை நோக்கி ஆதரவுக்கரம் நீட்டியிருக்காரு. அவருக்கு என்னகைமாறு செய்யப்போறோம்னுதெரியலை’’என்றுஆனந்த கண்ணீருடன் அஸ்வினி தெரிவித்தார்.

விளிம்புநிலை மக்களின் துயர் துடைத்தும் அவர்களின் வாழ்வா தாரம் மேம்படவும் நற்பணிகள் செய்துவரும் தமிழக முதல்வர் மாநிலம் கடந்து நாடு முழுக்க பாராட்டப்பட்டு வருகிறார். மக்களின் ஆட்சி என்பதன் காட்சியே இது. இவ்வாறு ‘தினகரன்’தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: "மக்களின் குரலுக்கு இந்த அரசு எப்போதும் செவி சாய்க்கும்": HOOTE APPல் கணக்கைத் துவக்கிய முதலமைச்சர்!