Tamilnadu

"மக்கள் அஞ்ச வேண்டாம்..160 நிவாரண முகாம்கள் தயார்": முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை செய்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையிலிருந்தே கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள் பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம், மூக்கு செட்டி தெரு, ஓட்டேரி, கொன்னூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.

பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரொட்டி, அரிசி, போர்வை, சோப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து கூறியது வருமாறு:-

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், அனைத்து மாவட்டங்களில் 5106 நிவாரண முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 160 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாகச் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும், 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்குச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Also Read: ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு தலைவனுக்கு உதாரணம் இவர்: சென்னை மழையில் முதல்வர் (ALBUM)