Tamilnadu
“காந்தியடிகள் முதல் அறியப்படாத தியாகிகள் வரை” : சென்னை பார்வையாளர்களைக் கவர்ந்த புகைப்படக் கண்காட்சி!
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சி நவம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் நவம்பர் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாகக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்திட, தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அத்துடன், காமராஜர் சாலையில் காண்போரை கவரும் வகையில் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ள 75ஆம் ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அன்றையதினம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்ட தலைவர்களைப் போற்றும் வகையிலும், குறிப்பாக, தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர்களின் தியாகங்களை வருங்காலச் சந்ததியினரும் அறிந்துணர்ந்து பயன்பெறும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை, கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய வளாகத்தில் 75வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணல் காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்று இக்கண்காட்சியைச் சிறப்பிக்கின்றன. ஏறத்தாழ இருபது முறை தமிழகத்திற்கு வருகைதந்து தமிழர்களை-தமிழகத்தை-தமிழ்மொழியை நேசித்த அண்ணல் காந்தியடிகளுக்கு விடுதலைப் போராட்ட வியூகங்களை வகுப்பதில் தமிழ்நாடு ஒரு முக்கிய களமாக விளங்கியதை வரலாறு போற்றிக் கொண்டுள்ளது.
சீரிய அவ்வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை எடுத்துக் கூறும் அரிய புகைப்படங்கள், இந்திய விடுதலைப் போராட்டங்களின் பல்வேறு வரலாற்றுத் தொகுப்புகள், குறிப்பாக, உப்பு சத்தியாகிரகப் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு போன்றவைகள் குறித்த புகைப்படங்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றும் மக்களால் இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் எனப் பலவும் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், பத்திரிகைத் தகவல் அலுவலகம் (PIB) புத்தக நிலையம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புகளும், தட்சிண சித்ரா குழுவினரால் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்டம் பற்றிய அருமையான பழைய மண் பொம்மைகள், ஒலியோகிராப் படங்கள், மரத்திலான இராட்டை போன்றவைகள், தமிழ்நாடு அரசு ஆவண காப்பகத்தின் மூலம் கட்டபொம்மன் தூக்கிலிட்டது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பானர்மேன் கொடுத்த அறிக்கை, மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட விசாரணை ஆவணங்கள், ஆஷ்துரை கொலை வழக்கு பற்றிய ஆவணம், நீல் சிலை உடைப்பு குறித்த ஆவணம், வ.உ.சி. வழக்கு (திருநெல்வேலி சதி வழக்கு) ஆவணங்கள், செஞ்சிக் கோட்டை மற்றும் இதர கோட்டையின் நிலவரைகள், வேலூர் சிப்பாய் கலகம் பற்றிய வரலாற்று ஆவணங்கள் குறித்த புகைப்படங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!