Tamilnadu

இந்தியா முழுவதும் கிளை; வெளிநாடுகளுக்கு சிலை கடத்தும் டெல்லி காட்டேஜ் நிறுவனம் சிக்கியது எப்படி?

சென்னை நுங்கம்பாக்கத்தில் சேர்ந்த காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எக்ஸ்போஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வெளிநாடுகளுக்கு இந்திய சிலைகளை கடத்துவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவல் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆயிரம் ஆண்டு பழமையான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 57 கிலோ எடை கொண்ட 4 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான சிவன் சிலை மற்றும் சிலை கடத்தல் தொடர்பான பல ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்‌.

விசாரணையில் அதே நிறுவனத்திற்கு சொந்தமான தஞ்சாவூரில் இயங்கி வரும் கடையிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கம்போடியா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இரண்டு 8 கை விஷ்ணு சிலைகள் கைப்பற்றப்பட்டது.

மேலும் சிலை கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டபோது இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுவது தெரியவந்தது. இந்தியாவில் பல இடங்களில் நிறுவனத்திற்கு கிளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

டெல்லியிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இருந்து 2 ஐம்பொன் சிலைகளும் கைப்பற்றப்பட்டது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் வெங்கடேசன் என்ற இருவரும் கைது செய்து முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதுவரையில் பல நாடுகளுக்கு இந்த நிறுவனம் சிலைகளை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி கூறினார்.

Also Read: “இருமல் டானிக் என நினைத்து தைலத்தை குடித்தவருக்கு ஏற்பட்ட துயரம்” : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!