Tamilnadu
“யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி பொருந்தும்?” : கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்.. முழு விவரம்!
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில் நகைகடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாட்டில், பொது மக்களின் அத்தியாவசியம் மற்றும் அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் நகை அடமானத்தின் பேரில் நகைக் கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
மேற்படி கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்குட்பட்டு பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு வெளியிடப்படுகின்றன:
1. பொதுநகைக்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பினைத் தொடர்ந்து, தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக குடும்ப அட்டையின் அடிப்படையில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன்கள் தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு, கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டு, நகைக்கடன்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2. எனவே, நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கு எந்தவொரு தகுதியையும் நிறைவு செய்யாத நபருக்கோ அல்லது குடும்பத்திற்கோ தள்ளுபடி சென்றடையக் கூடாது. அதேபோன்று எந்தவொரு காரணத்தைக் கொண்டும் தள்ளுபடி பெறுவதற்கு முழுத்தகுதியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர பிரிவைச் சார்ந்த குடும்பத்தினர் விடுபட்டு விடக்கூடாது.
3. மேற்படி நகைக்கடன் நிலுவைத் தொகையில், கீழே விவரிக்கப்பட்ட வகையைச் சார்ந்தவர்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் மற்றும் தள்ளுபடி பெற தகுதியற்றவர்களாவார்.
1. பொதுநகைக்கடன் தள்ளுபடி பெறத்தகுதிபெற்ற இனங்கள் குறித்த பட்டியல் (Eligible Categories)
1 தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொது நகைக்கடன்கள் பெற்றிருந்து, அவர்களின் அனைத்து பொது நகைக்கடன்களும் சேர்த்து மொத்த எடை 40 கிராமிற்கு உட்பட்டு இருந்தால், இதில் கண்டுள்ள இதர தகுதிகளுக்கு உட்பட்டு அந்த நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
2. கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்பத்தினர் 31.03.2021ஆம் நாள் வரை 5 பவுனுக்கு மிகாமல் உள்ள நகைகளுக்கு (மொத்த எடை 40 கிராம் வரை Gross Weight upto 40 gram), ஈடாகப் பெற்ற மொத்த நகைக்கடன்களில், அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள தொகையை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், இந்தப் பட்டியலில் கண்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத நேர்வுகளை நீக்கியும் மீதம் நிலுவையில் உள்ள பொது நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
3. பொது நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கு இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்ட (Cutoff datc) 31.03.2021 அன்றுவரை, தகுதிபெற்ற கடன்தாரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்களின் கணக்கில், அவர்கள் பகுதியாக செலுத்தியிருப்பின், அவ்வாறு பகுதியாக செலுத்திய நிலுவைத்தொகை நீங்கலாக மீதம் நிலுவையில் இருந்த தொகை (அசல் - வட்டி - அபராதவட்டி இதர செலவினங்கள் ஏதுமிருப்பின்) மட்டுமே தள்ளுபடிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
4. 31.03.2021ஆம் தேதியில் தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்களின் கணக்கில், நிலுவை இருந்து, அதன்பின்னர் அரசாணை வெளியிடப்படும் நாள் வரை கடன் நிலுவைத் தொகையில் பகுதியாக செலுத்தப்பட்டிருந்தால், அவ்வாறு செலுத்தப்பட்ட தொகை நீங்கலாக, எஞ்சிய கடன் நிலுவைத்தொகை மட்டுமே தள்ளுபடியில் இடம் பெறவேண்டும். இந்த நேர்விலும், இந்தப்பட்டியலில் கண்டுள்ள இதர தகுதிகளை பூர்த்தி செய்யும் குடும்பத்தினருக்கே தள்ளுபடி வழங்கப்பட வேண்டும்.
5. ஆதார் எண்ணின் அடிப்படையில், ஒரே நபர் மற்றும் குடும்ப அட்டையில் கண்டுள்ள அவர்தம் குடும்பத்தினரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் மொத்த எடை 40 கிராமிற்குட்பட்டு பல நகைக்கடன்கள் பெற்றிருந்து, அக்கடன்கள் அனைத்தும் சேர்த்து மொத்த எடை 40 கிராமிற்குட்பட்டிருந்தால் மட்டுமே, இந்தப் பட்டியலின்படி இதர தகுதிகளுக்கு உட்பட்டு அக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட தகுதியானதாகும்.
6. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை, சரியாக அளிப்பவர்கள் மட்டுமே இத்தள்ளுபடி திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
7, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத்தமிழர்கள் இத்திட்டத்தின்கீழ் மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தால், அவர்களும் நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
8. தமிழ்நாடு அரசின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் (Family Pensioners) இத்திட்டத்தின்கீழ் மேற்கூறிய இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் அவர்களும் நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
9. கடன்தாரரின் குடும்ப அட்டை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு, தற்போது வரை செல்லுபடி ஆகக்கூடிய குடும்ப அட்டையைக் கொண்டுள்ள கடன்தாரர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெறத்தகுதியானவர்கள் ஆவர்.
பொது நகைக்கடன் தள்ளுபடிக்குத் தகுதிபெறாத இனங்கள் குறித்த பட்டியல் (Ineligible Categories)
1. 5 பவுனுக்கு மிகாமல் நகையீட்டின் பேரில் பொது நகைக்கடன் பெற்று, 31.03.2021 அன்று கடன் நிலுவையாக இருந்து, அரசாணை வெளியிடுப்படும் நாள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அக்கடன் தொகை முழுவதும் திரும்பச் செலுத்தப்பட்ட கடன்கள்.
2. ஆதார் எண்ணின் அடிப்படையில், ஒரே நபர் தமிழ்நாட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேற்பட்டு (மொத்த எடை 40 கிராமிற்கு மேற்பட்டு) நகை அடமானம் வைத்து பெற்ற அனைத்து நகைக்கடன்கள் மற்றும் அத்தகைய நபர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன்கள்.
3. குடும்ப அட்டை எண்ணின் அடிப்படையில் ஒரே நபரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களோ தமிழ்நாட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் 5 பவுனுக்கும் அதிகமாக (மொத்த எடை 40 கிராமுக்கு அதிகமாக) தங்க நகை அடமானம் வைத்து பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்கள்.
4, 31.03-2021-க்குப் பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன்கள்.
5. 2021-ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன்பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்கள்.
6. எந்தப்பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் (NPHH NCNon Priority House Hold - No Commodity) மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற நகைக்கடன்கள்.
7. வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் AAY (அந்தியோதயா அன்ன யோஜனா) குடும்ப அட்டைதாரர்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக நகைகளை ஈடாகவைத்து கடன் பெற்றவர்கள்.
8. அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அரசுத்துறை நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையிலோ அல்லது காலமுறை அடிப்படையிலோ அல்லது தொகுப்பூதிய அடிப்படையிலோ பணியாற்றுபவர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள், (குடும்ப ஓய்வூதியதாரர்கள் தவிர) ஆகியோர் பெற்ற நகைக்கடன்கள். (அரசு ஊழியர்கள் என்பவர்கள் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களைக் குறிக்கும். அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இவ்வரையறை பொருந்தும்)
9. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்கள்.
10. கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக்குழுவினர், அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்கள்.
11. சங்க அளவில் நகைக்கடன் வழங்க நிதியாதாரம் ஏதுமில்லாமலும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட காசுக்கடனிலிருந்து தொகை ஏதும் பெறப்படாமலும், நகையை மட்டும் பெற்றுக்கொண்டு பணம் ஏதும் பட்டுவாடா செய்யாமலும், உறுப்பினர்களின் சேமிப்புக்கணக்கில் வரவுவைத்து பணப்பட்டுவாடா செய்யாமல் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் (ஏட்டளவில் நகைக்கடன் பட்டுவாடா).
12. சங்க அளவில் நகைகடன் வழங்க நிதியாதாரம் ஏதுமில்லாமலும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட காசுக்கடனிலிருந்து தொகை ஏதும் பெறப்படாமலும், நகையை மட்டும் பெற்றுக்கொண்டு பணம் ஏதும் பட்டுவாடா செய்யாமலும் நகைக்கடன் அனுமதிக்கப்பட்டு அந்தத்தொகை சங்கத்தில் இட்டுவைப்புகளாக (டெபாசிட்டுகள்) முதலீடு செய்யப்பட்ட நகைக்கடன்கள் (ஏட்டளவில் நகைக்கடன் பட்டுவாடா),
13. நகைக்கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் எடை, தரம், தூய்மைக்குறைவு அல்லது தரம்குறைவான நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு, அந்நகைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கடன்தொகைக்கும் அதிகமாக வழங்கப்பட்ட தொகையை மட்டும் தள்ளுபடியிலிருந்து நீக்கவேண்டும்.
14. கடன் வழங்கப்பட்ட தேதியில் ஒரு கிராமுக்கான சந்தை மதிப்பில் அனுமதிக்கப்பட வேண்டிய 75 சதவிகித தொகைக்கு உட்பட்ட நகைக்கடன் தொகை மட்டுமே தள்ளுபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சரக அளவிலான சிறப்பு குறைதீர்வுக்குழு அதனை ஆராய்ந்து மாவட்டக் குழுவிற்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் மாவட்டக்குழு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கலாம்.
15. நகைகளே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள்.
16. போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள்.
17. சுயவிருப்பத்தின் பேரில் நகைக்கடன் தள்ளுபடிபெற விருப்பம் இல்லாதவர்கள் (படிவம் 3 இல் உறுதிமொழிச் சான்று பெறவேண்டும்)
18. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாமல் பிறமாநிலங்களால் (புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட)
வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இருப்பின் அவர்களுக்கு தள்ளுபடிகிடையாது.
19.ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இல்லாமல் பிறமாநிலங்களின் (புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட) முகவரி கொண்ட ஆதார் அட்டைகள் இருப்பின் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
கடன் தள்ளுபடி பட்டியல் தயாரித்தல்
1. சங்கத்தில் வங்கியில் பொது நகைக்கடன் பெற்று 31.03.2021 அன்று நிலுவையிலிருந்த நகைக்கடன்கள் பட்டியலை சங்கச் செயலாளர் / வங்கி மேலாளர் தயாரித்து நகைக்கடன் சரிபார்ப்புக் குழுவிற்கு வழங்கவேண்டும்.
2. சங்கத்தில் வங்கியில் பொது நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் பட்டியலை பெற்று கூட்டுறவு சார் பதிவாளர் (அ) முதுநிலை ஆய்வாளர் | மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் களமேலாளர் (அ) சரக மேற்பார்வையாளர் | நகை மதிப்பீட்டாளர் ஆகியோரை உள்ளடக்கிய அயல் மாவட்ட அலுவலர்களைக் கொண்ட சரிபார்ப்புக்குழு மேற்கண்ட அனைத்து கடன்களையும் 100% ஆய்வு செய்யவேண்டும். இதற்கு அந்தந்த மண்டல இணைப் பதிவாளர் / கூடுதல் பதிவாளர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இக்குழு 100% நகைக்கடன் ஆய்வு செய்த பட்டியலை தொடர்புடைய சரகத் துணைப்பதிவாளருக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொதுநகைக்கடன் பட்டியலை அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் நிர்வாகக்குழுக் கூட்டத்தை கூட்டி நிர்வாகக்குழுவின் ஒப்புதல் பெறுவதை சரகத் துணைப்பதிவாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. சரிபார்ப்புக் குழுவால் 100% ஆய்வு செய்த பட்டியலை பெற்ற சரகத் துணைப்பதிவாளர் அதனை மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்பட்டியலில் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இருவரும் மேலொப்பம் செய்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், அப்பட்டியலில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் குறித்த தரவுகள் கணினியில் பகுப்பாய்வு செய்யப்பட்டு இறுதிப் பயனாளிகள் பட்டியல் மாவட்டம் வாரியாக கூடுதல் பதிவாளர் / மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5. நகைக் கடன் தள்ளுபடி பெறுவதற்கு தகுதி பெறாத குடும்பங்களின் பட்டியலும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் தகுதியின்மைக்கான காரணமும் குறிப்பிடப்பட வேண்டும். பதிவாளர் அலுவலகத்தால் அனுப்பப்பட்ட இறுதிப் பயனாளிகளின் பட்டியலை பெற்ற மண்டல இணைப்பதிவாளர்கள் அதனை கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் மூலமாக 5% மேலாய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக உரிய செயல்முறை ஆணைகளை மண்டல இணைப்பதிவாளர் பிறப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக் குழுக்களால் சரிபார்க்கப்பட்ட நகைக்கடன் பெறத் தகுதியான பயனாளிகள் பட்டியலின் நகலொன்றை தொடர்புடைய கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்களுக்கு சரக துணைப்பதிவாளர் அளிக்க வேண்டும். இப்பட்டியலில் கண்டுள்ள நகைக்கடன்களை அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் 100% ஆய்வு செய்ய வேண்டும்.
6. அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநருக்கு வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை துறையினரால் பயனாளிகளின் நகைக் கடன் விவரங்கள் மற்றும் நகைகள் சரிபார்க்கப்பட்டு கையொப்பமிடப்பட்டு ஒப்புதலளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி பெறுவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத்தில் வங்கியில் பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் விளம்பரப் பலகையில் (Flex Board) பொருத்தி வெளியிட வேண்டும். இவ்விபரங்களை அந்தந்த மத்திய கூட்டுறவு வங்கியின் இணைய தளத்திலும், மாவட்ட ஆட்சியரின் இணைய தளத்திலும் வெளியிட தொடர்புடைய மண்டல இணைப்பதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்களின் ஒப்புதல் பெறப்பட்ட இறுதிபட்டியல் தொடர்புடைய சரக துணைப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். சரக துணைப்பதிவாளர்கள் இறுதி பயனாளிகளின் பட்டியலை (Final Waiver Claim) தமது மேலொப்பத்துடன் மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
8. இவ்வாறு இறுதி செய்யப்பட்ட தகுதிவாய்ந்த பயனாளிகளின் பட்டியலுக்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெறப்படுவதை சரகத்துணைப்பதிவாளர் உறுதிசெய்து கொள்ள வேண்டும்,
9. மேற்குறிப்பிட்டவாறு தொடர்புறுத்தப்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதிபெற்ற இறுதிப் பயனாளிகளின் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையிலும் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலோ அல்லது களஆய்வின் அடிப்படையிலோ சரிபார்த்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2-இன் படி உள்ள சரிபார்ப்பு விவரங்கள் மற்றும் உறுதிமொழிப் படிவங்கள் ஆகியவற்றை ஒவ்வொரு கடன்தாரருக்கும் பூர்த்திசெய்து சங்கத்தின் செயலாளர் / கூட்டுறவு வங்கிகளின் கிளைமேலாளர் "அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நகைக்கடன் தள்ளுபடிக்குப் பரிந்துரைக்கப்படும் தகுதியான குடும்பம் எனச் சான்றளிக்கப்படுகிறது" என்று படிவம் 1-இல் சான்று அளிக்கவேண்டும்.
10. அதேபோன்று படிவம் 2-இல் கண்டுள்ள கடன்தாரர் அளிக்க வேண்டிய படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்திசெய்து தள்ளுபடி பெறும் கடன்தாரரிடம் உறுதிமொழியை பெற்று சங்கத்திலும் தொடர்புடைய சரகத்துணைப்பதிவாளர் அலுவலகத்திலும் பராமரிக்க வேண்டும். இதில், தவறான தகவல் தெரிவிக்கும் கடன்தாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
11. நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் அதுகுறித்து மனுக்களை அளிக்கும் நேர்வில், அத்தகைய மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்ட அளவில் கீழ்க்கண்ட மாவட்டகுழு அமைக்க வேண்டும்.
அ) கூடுதல் பதிவாளர் மண்டல இணைப்பதிவாளர்
ஆ) மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர்
இ)மண்டல இணைப்பதிவாளர் கூடுதல் பதிவாளரால் நியமிக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்
ஈ) மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் உதவி பொதுமேலாளர் இக்குழுவிற்கு மண்டல இணைப்பதிவாளர் கூடுதல் பதிவாளர் தலைவராக இருப்பார்.
இதற்கான ஆணையினை மண்டல இணைப்பதிவாளர்/ கூடுதல் பதிவாளர் பிறப்பிக்கவேண்டும். இக்குழு ஒவ்வொரு சரகத்திற்கும் சிறப்பு குறைதீர்வுக் குழுக்களை கீழ்க்கண்ட அலுவலர்களைக் கொண்டு ஏற்படுத்த வேண்டும்:
அ) சரகத்தின் கூட்டுறவு துணைப்பதிவாளர் (தலைவர்)
ஆ) சரகத்தில் உள்ள 2 கூட்டுறவு சார்பதிவாளர்கள் இ)மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 2 கௗமேலாளர்கள்/சரக மேற்பார்வையாளர்கள் பெறப்படும் ஒவ்வொரு மனுவினையும் சரக அடிப்படையிலான சிறப்பு குறைதீர்வுக்குழு தீரஆராய்ந்து, அதன்படி அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்டக்குழு இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
12 நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் அதற்குரிய மனுவினை, மாவட்ட இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்ட ஒருமாத காலத்திற்குள், அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எழுத்துப் பூர்வமாக தகுந்த ஆதாரங்களுடன் அளிக்க வேண்டும். ஒருமாத காலத்திற்கு பின் பெறப்படும் எந்தவொரு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒவ்வொரு மண்டல இணைப்பதிவாளரும் இதற்கென தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும்.
13. நகைக்கடனுக்கான தள்ளுபடிச் சான்றிதழையும், நகையையும் தொடர்புடைய கடன்தாரர்களுக்கு வழங்குவதற்கு முன்பு, படிவம் 1 மற்றும் படிவம் 2-இல் கண்டுள்ள விவரங்களைப் பெறும் போதே, நகைமதிப்பீட்டாளர் மூலம் மீண்டும் ஒருமுறை நகையின் தரம், தூய்மை, எடை மற்றும் உண்மைத் தன்மை குறித்து 100% பரிசோதித்து சான்று பெற வேண்டும். இதில் நகையின் தரம், தூய்மை மற்றும் எடை ஆகியவற்றில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கடன்தாரருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தினருக்கோ தள்ளுபடி வழங்குவது குறித்து சரக அளவில் நியமிக்கப்படும் குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாவட்டக்குழு உரிய முடிவு எடுக்க வேண்டும்.
14. நகைகளே இல்லாமல் நகைக்கடன் வழங்கப்பட்டது மற்றும் போலி நகைகளைப் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், அவற்றைத் தவறாக மதிப்பீடு செய்த நகைமதிப்பீட்டாளர், கடன் வழங்கியதில் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலர்கள் / நிர்வாகக்குழு உறுப்பினர்கள் / கடன்தாரர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, தகுதி நீக்க நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
15. பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்ற கடன்தாரர்களுக்கு அவர்தம் நகைகள் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு திரும்ப வழங்கப்பட வேண்டும்:
1. பொது நகைக் கடன்கள் தள்ளுபடி ஒருங்கிணைந்த தணிக்கை (Concurrent Audit) கூட்டுறவு தணிக்கைத் துறையினரால் மேற்கொள்ளப்படவேண்டும்.
2. பொது நகைக் கடன்கள் தள்ளுபடி தணிக்கை அயல் மாவட்ட கூட்டுறவுத் தணிக்கையாளர்களால் மேற்கொள்ளப்படவேண்டும். தள்ளுபடி பெற்ற கடன் விவரம் மற்றும் நகைகள் மேற்படி அயல் மாவட்ட கூட்டுறவுத் தணிக்கை துறையினரால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்புடைய சரக துணைப்பதிவாளர் உறுதி செய்ய வேண்டும்.
3. நகைக்கடன் பெற்ற கடன்தாரரின் அடையாளத்தை, ஆதார் அட்டையின் அடிப்படையில் உறுதி செய்து, அவரிடம் மட்டுமே நகைகள் திரும்ப வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும், வேறு நபர்களிடம் நகைகள் வழங்கப்படக்கூடாது.
4. நகைகளைத் திரும்ப வழங்கும் போது, கடன்தாரரது புகைப்படத்தினையும் எடுத்து சங்கக் கோப்பில் இணைத்து பராமரிக்க வேண்டும்.
5. நகைக்கடன் பெற்ற கடன்தாரர் உயிருடன் இல்லாத நேர்வில், கடன்தாரரால் கடன் பெறும் போது நியமனம் செய்யப்பட்ட நியமனதாரர் (Nominee) / கடன்தாரரின் உரிய சட்டப்பூர்வ வாரிசுதாரர் வாரிசுதாரர்களுக்கு உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி நகைகள் திரும்ப வழங்கப்பட வேண்டும். இந்நேர்விலும், நகைகளைத் திரும்ப வழங்கும் போது, அவர்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் புகைப்படத்தினையும் எடுத்து சங்கக் கோப்பில் இணைத்து பராமரிக்க வேண்டும்.
16. பயனாளிகளின் பட்டியல் தணிக்கைக்குழுவின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
IV.பொது
1. நகைக்கடன்கள் வழங்கப்பட்ட போது பெறப்பட்ட ஆவண (குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை) விவரங்களும் அதற்கு பின்னர் கோரிப்பெறப்பட்ட ஆவண விவரங்களும் வேறுபட்டு இருந்தால், அத்தகைய நபர்கள் சார்ந்த குடும்பத்தினர் பெற்ற - நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து மாவட்ட ஆய்வுக்குழுவால் முறையான ஆவண ஆய்வுக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும்.
2. கீழ்க்கண்ட ஐந்து நேர்வுகளில் இடம் பெற்றவர்கள் கடன்பெற்ற கூட்டுறவு சங்கத்தினைத் தொடர்பு கொண்டு சரியான விவரங்களை அளித்த பின்னர், அவ்விவரங்கள் ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்டு, பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இத்தரவுகள் கணினிமூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவை மாவட்ட குழுவிற்கு அனுப்பப்படும். இவ்விவரங்கள் மாவட்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு தள்ளுபடி குறித்து உரிய முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அ, தங்களது குடும்ப அட்டை எண்ணை அளிக்காதவர்கள் ஆ.குடும்ப அட்டை எண்ணை தவறாக அளித்தவர்கள் இ. ஆதார் எண்ணை அளிக்காதவர்கள் ஈ.ஆதார் எண்ணை தவறாக அளித்தவர்கள் மற்றும் உ. ஆதார் எண்ணும் குடும்ப அட்டை எண்ணும் ஒத்துப்போகாத வகையில் மாற்றி தகவல் அளித்தவர்கள்.
3. இந்த நேர்வுகளிலும் ஆய்வுக்குப் பிறகு இதர நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதி பெற்றிருந்தால் மட்டுமே, ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு (மொத்த எடை 40 கிராம்) உட்பட்டு பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும்.
4, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 1983 பிரிவு 81, 82 (ம) 87 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள் 1988 ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வ விசாரணை, நிதிமுறைகேடுகள், குற்ற நடவடிக்கைகள் மற்றும் தண்டத்தீர்வை நடவடிக்கைகளுக்கும், நிதி முறைகேடுகளுக்கும் உள்ளான இனங்களுக்கு இத்தள்ளுபடித் திட்டம் பொருந்தாது, இத்தகைய இனங்களில், விசாரணை முடிவின் அடிப்படையில் இத்திட்டத்தின் பலன் கடன்தாரர்களுக்கு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!