Tamilnadu
“நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழும்”: அமைச்சர் மா.சு உறுதி!
தமிழ்நாடு முழுவதும் 7 வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் இன்று நடைபெற்று வருகின்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் பொழுது, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணைநர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்," தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் 7வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆர்வமுடன் மக்கள் தடுப்பூசி செலுத்த வருகின்றனர். இதுவரை 5கோடி 73லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 87% முதல் தவணையும், 48% 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று சென்னை வந்த 14 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சேர்த்து 59லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இந்த பேரிடர் காலத்தில் தமிழ்நாடு மக்கள் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படவில்லை. நவம்பர் மாதத்திற்கு 1 கோடி 40 லட்சம் தடுப்பூசி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நவம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் பள்ளிகளை பொறுத்தவரை உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகம் மற்றும் அம்மா மினி கிளினிக் மையங்களில் கூடுதலாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பணியாளர்களின் விவரம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு பணியாளர்கள் அதிகமாக உள்ள மையங்களில் ஆட்கள் குறைக்கப்பட்டு, மாற்று இடத்தில் பணி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் சேவை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வழக்கமாக மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதனை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை உள்ளிட்ட சேவை துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், 21,936 பணியாளர்களும், சென்னையில் 3,568 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 168 கொசு ஒழிப்பு வாகனங்களும், 215 கை தெளிப்பாண்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. நள்ளிரவு எழும்பூர் தாய் சேய்நல மருத்துவமனையில் சீலிங் பேன் விழுந்தது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றுள்ளனர். உரிய காரணம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!