Tamilnadu
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் விழா : பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்த நாள் மற்றும் அன்னாரது 59வது குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் 30.10.2021 அன்று காலை 9.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
அதே நாளில் (30.10.2021) சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்துச் சிறப்பிக்க உள்ளார்கள்.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ஆம் நாள் பிறந்தார். இளம் வயதிலேயே பெற்ற தாயை இழந்து, பின் இசுலாமியத் தாய் ஆயிஷாபீவி அவர்களால் பாலூட்டி சீராட்டி வளர்க்கப்பட்டதன் காரணமாக, இசுலாமிய மக்களின்பால் அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பினை மட்டுமே முடித்திருந்தாலும், அன்னிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போரட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர் பெருமகனார், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார்.
1933ஆம் ஆண்டு முதன் முறையாக, சாயல்குடியில் விவேகானந்தர் பெயரிலான வாசகசாலையில் எவருமே எதிர்பாராத வகையில், மூன்று மணிநேரம் விவேகானந்தரைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவே தேவர் பெருமகனாரின் பொதுவாழ்விலே திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல மணி நேரம் உரையாற்றிடும் தேவர் திருமகனார் அவர்கள், தென்னக அரசியலில் கையிலெடுத்த குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான போராட்டமே தேவரின் தனித் தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920 ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றிய பெருமையும் தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும்.
மதுரை அன்னை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குள் ஆதிதிராவிட மக்கள் சென்று வழிபடத் இருந்த தடையினைத் தகர்த்தெறிந்ததைத் தொடர்ந்து, தேவர் பெருமகனாரின் அரசியல் பிரவேசமாக, 1937ஆம் ஆண்டு நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் மாபெரும் வெற்றி, 1939ஆம் ஆண்டு ஜூன் 22 அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து செயல்படல், 1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார்.
பசும்பொன் தேவர் திருமகனார் ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். தந்தை பெரியார் அவர்கள் “பசும்பொன் தேவர் தனக்காக எதையும் எதிர்பாராதவர், நாட்டுக்காக சகலத்தையும் துறந்தவர், தனது வீரமிகுப்பேச்சால் எண்ணற்ற தியாகிளையும், விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர், சுத்தத் தியாகியவர்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். ‘வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ எனத் தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்டவர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு பசும்பொன்னில் அஞ்சலி செலுத்திய பின்னர் தேவர் பெருமகனாரை ‘‘நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர் அவர்கள் தமிழ் மொழி மீது ஆழமான பற்றுக் கொண்டவர். தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் 2007ஆம் ஆண்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நுாற்றாண்டு விழாவினை சிறப்புடன் கொண்டாடியது மட்டுமின்றி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம் புணரமைப்பு, நூற்றாண்டு தோரணவாயில், புகைப்படக் கண்காட்சிக் கூடம், அணையாவிளக்கு, புதிய நூலகக் கட்டடம், முளப்பாரி மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் மற்றும் தேவர் பெயரில் அரசு கல்லூரி, இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மதுரையில் மிக உயரமான தேவர் சிலை அமைத்து, தேவர் பெருமகனாருக்கு மேலும் பெருமை சேர்த்தது கழக அரசு என்று குறிப்பிட்டு, இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனார் அவர்களின் புகழ் வாழ்க, வளர்க! அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர். ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும், பேச்சாற்றலும் கொண்டிருந்தார். ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானம், ஆன்மீகச் சொற்பொழிவு இவருக்கு தெய்வத் திருமகன் என்ற பெயரை பெற்றுத் தந்தது. இவர் பிறந்ததும் நிறைந்ததும் அக்டோபர் திங்கள் 30ஆம் நாளிலே. அதன் பொருட்டு, தேவர் திருமகனாரின் ஜெயந்தியும், குருபூஜையும் பசும்பொன்னில் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!