Tamilnadu
“தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணை சரியான முறையில் செயல்படுகிறது” : அமைச்சர் துரைமுருகன் !
முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்து நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது :-
உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரையில் நீரை தேக்கிவைக்க வழங்கிய ஆணையின்படியும், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழ்நாடு கண்காணித்து வருகிறது.
கேரளாவைச் சார்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 28.10.2021 அன்று தமிழ்நாட்டின் வாதங்களை கேட்ட பின், 11.11.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்வரை, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு, நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் படியே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைபாதை வழியாக கடத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைபாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை/அறிவிப்பு அளித்தபின் இன்று காலை 7.30 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது.
இது, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது.
இதற்கு புறம்பாக வரும் எந்த தகவலும் உண்மையானவை அல்ல என்பதால் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகும். தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் துறை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!