Tamilnadu

18 கிலோ கஞ்சாவை சென்னைக்கு கடத்திவந்த கும்பல்.. RPF வீரர்களை பார்த்ததும் எஸ்கேப் : தீவிர தேடுதல் வேட்டை!

தெலங்கானா மாநிலத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புடைய 18 கிலோ கஞ்சா பாா்சல்களை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலிலேயே போட்டுவிட்டு தலைமறைவான கடத்தல் ஆசாமிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னை தாம்பரத்திற்கு சாா்மினாா் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டது. அந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னை தாம்பரம் ரயில்நிலையம் பிளாட்பாரம் 8 ல் வந்து நின்றது. இதையடுத்து ரயிலில் வந்த பயணிகள் ரயிலை விட்டு இறங்கத்தொடங்கினா்.

அப்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையினா், ரயில் பெட்டிகளில் ஏறி சோதணை நடத்தினா். அப்போது S2 என்ற தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டியில் ஒரு பொ்த்திற்கு அடியில் 5 பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனா். RPF படை வீரா்களை பாா்த்ததும், அந்த பாா்சல்களை எடுக்காமல், பயந்து இறங்கிவிட்டனா்.

இதையடுத்து RPF வீரர்கள் அந்த பாா்சல்கள் யாருடையது என்று பயணிகளை விசாரித்தனா். ஆனால் யாருமே பாா்சல்களுக்கு உரிமை கோரவில்லை. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினா்,அந்த பாா்சல்களை போலிஸ் நிலையத்திற்கு எடுத்து கொண்டு சென்று பிரித்து பாா்த்தனா்.

அவற்றில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். 5 பாா்சல்களிலும் மொத்தம் 18 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆா்பிஎப் அதிகாரிகள்,சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலிஸுக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் வந்து போதைப்பொருளை கைப்பற்றி எடுத்து சென்றனா்.

இதற்கிடையே தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினா் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, அந்த S 2 பெட்டியில் பயணம் செய்த முன்பதிவு பயணிகள் 72 பேரின் பட்டியலை ரயில்வே அதிகாரிகளிடம் பெற்று, அதில் சந்தேகத்திற்கிடமான பயணிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.

தெலங்கானாவிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா போதை பொருளை கடத்தல் ஆசாமிகள், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பயந்து ரயில் பெட்டியிலேயே போட்டுவிட்டு, தப்பியோடி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “10 சரக்குகளை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் பிடித்தா மோடி அரசு?” : போதைப்பொருள் கடத்தல் மையமாகிறதா குஜராத்?