Tamilnadu

10 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்.. காட்டி கொடுத்த செல்போன் சிக்னல்: நடந்தது என்ன?

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் துளசிவம் கிருஷ்ணா. தொழிலதிபரான இவருக்கு சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில் 40 ஆயிரம் சதுரடியில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு பல கோடியாகும். இந்த நிலத்தை விற்க கிருஷ்ணா முயற்சி செய்து வந்துள்ளார்.

இதனை அறிந்த பாலாஜி என்பவர் நிலத்தை வாங்க முன்வந்துள்ளார். இதற்காக துளசிவம் கிருஷ்ணா சென்னைக்கு வந்துள்ளார். அப்போது பாலாஜி மற்றும் நில புரோக்கர்கள், நிலத்தை தங்களது பெயருக்கு மாற்றும் அதிகாரம் கொடுக்கும் படி அவரை மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர்.

ஆனால், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாததால், துளசிவம் கிருஷ்ணா எழுதிக் கொடுத்தது காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தனக்குத் தெரிந்த சில புரோக்கர்களை சேர்த்துக் கொண்டு கடந்த மாதம் 18ம் தேதி துளசிவம் கிருஷ்ணாவைக் கடத்தியுள்ளனர்.

இதையடுத்து துளசிவம் கிருஷ்ணாவின் தாயார் ரூபாவுக்கு போன் செய்து, "உங்கள் மகனைக் கடத்திவிட்டோம். சென்னையில் உள்ள நிலத்தை எழுதி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரூ.10 கோடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் மகனை விடுவிப்போம்" என மிரட்டியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரூபா இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து விருகம்பாக்கம் போலிஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது பெங்களூருவில் உள்ள ஓட்டலில் துளசிவம் கிருஷ்ணா இருப்பதை போலிஸார் கண்டறிந்தனர்.

உடனே அங்குச் சென்ற தனிப்படை போலிஸார் துளசிவம் கிருஷ்ணாவை பத்திரமாக மீட்டனர். பிறகு இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பாலாஜி, நில புரோக்கர்களான சுரேஷ், ஸ்பீடு செல்வா, ஜான்சன், திருமுருகன் ஆகிய 5 பேரை அதிரடியாகக் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ₹5 கோடி நிலத்தை அபகரித்த திருப்பூர் பாஜக நிர்வாகி; நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!