Tamilnadu

“நடிகை அளித்த பாலியல் புகார் - முன்னாள் அமைச்சர் மீது 341 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்” : பின்னணி என்ன?

நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தினி. மலேசிய நாட்டின் தமிழக அம்பாசிடராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே 28ம் தேதி, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், 2017ம் ஆண்டு பரணி என்ற துணை நடிகர் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின் ஐந்து வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், தன்னை மூன்று முறை கட்டாய கருச்சிதைவு செய்யச் சொன்னதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், திருமணம் செய்துகொள்வதாக தொடர்ந்து ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்ததாகவும் தெரிவித்த சாந்தினி, தன்னை அந்தரங்கமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியதாகவும் புகார் அளித்தார். இதுதொடர்பான வாட்ஸப் சாட் ஆதாரங்கள் மற்றும் வீடியோ ஆடியோ ஆதாரங்களை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

அதுமட்டுமல்லாது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும் எனவும் தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த புகார் ஆனது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவிற்கு மாற்றப்பட்டது. அந்த அடிப்படையில், நடிகை சாந்தினி பெசன்ட் நகரில் வசித்து வருவதால், அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

புகாரை விசாரித்த போலிஸார், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல், 417 - நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், 67(a) - தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்கு பதிவு குற்றத்தடுப்பு பிரிவு போலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தப் புகாரில் ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில், 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: Aashram படக்குழு மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் தாக்குதல் : இயக்குநர் மீது மை பூசிய கொடூரம்.. நடந்தது என்ன?