Tamilnadu

கைகொடுத்த மெகா தடுப்பூசி முகாம்கள்: 1.10 கோடி தடுப்பூசி செலுத்தி தமிழ்நாடு அரசு சாதனை!

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆறாவது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாமில் 22.33 இலட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50,000 மையங்களில் மெகா கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.

இம்மையங்களில் 18வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இது வரை நடைபெற்ற ஐந்து மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் மூலம் 1.10 கோடி தடுப்பூசி செலுத்தி தமிழ்நாடு அரசு சாதனைப் படைத்துள்ளது.

ஆறாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்புமுகாம்களில் 22,33,219 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 8,67,573 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 13,65,646 பயனாளிகளுக்கும் கோவிட்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நேற்று நடைபெற்ற ஆறாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ‘சமூக நீதிக் கண்காணிப்புக் குழு’ அமைத்து முதல்வர் உத்தரவு : தலைவர் மற்றும் உறுப்பினர் பற்றிய விவரங்கள்!