Tamilnadu

“தினந்தோறும் 7.5 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் ” : அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி !

தீப ஒளித் திருநாளையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “தமிழ்நாட்டில் உள்ள 16 பேருந்து பணிமனைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் வணி வளாகம் கட்டப்பட்டு, தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அதேபோல் தொழிலாளர்களின் பிரச்சனையைப் பேசுவதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளோம்.

விரைவில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போன்ஸ குறித்தான அறிவிப்பு வெளியாகும். டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத் துறையும் சிரமத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. தினந்தோறும் 7.5 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்கிறார்கள்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தீப ஒளித் திருநாளையொட்டி பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் சென்ற வரச் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற்று தி.மு.க சாதனை” : வெற்றி வேட்பாளர்களின் விபரங்கள்!