Tamilnadu
தொட்டால் உதிரும் கட்டிடம்.. கான்ட்ராக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் ரெய்டு - அடுத்து சிக்கலில் OPS?
அ.தி.மு.க ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்புக் கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக ரூ.112.6 கோடி செலவில் 864 வீடுகள் கட்டித் தருவதற்குக் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு 2019-ல் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் ‘பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மூலம் செய்து முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே உடைந்து விழுந்துள்ளதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியம் கட்டிடத்தை கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தின் தலைவர் தென்னரசு வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தின் தலைவர் பி.எஸ்.தென்னரசு என்பவர். இவர் பல அரசு கட்டிடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள், பாலங்கள் என கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவரது இல்லமானது பரமத்தி வேலூர் நல்லூர் அடுத்த கோலாரத்திலும், இவரது அலுவலகமானது நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்திலும் இயங்கி வருகிறது. இந்த இரண்டு இடத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் இறுதியில் தான் முடிவுகள் தெரியவரும்.
இந்த நிறுவனம் தான் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு தொட்டால் உதிரும் கட்டிடம் என அண்மையில் சர்ச்சைக்குள்ளான சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியம் கட்டிடத்தை கட்டியுள்ளனர். அதேபோல் விழுப்புரத்தில் கதவனையை கட்டியது, தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரிகள் கட்டியுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தான் அதிகளவில் கட்டுமான ஒப்பந்தங்கள் இந்நிறுவனத்திற்கு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைப்பெற்று வருகிறது என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இந்நிலையில், புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, ஏற்கெனவே பி.எஸ்.டி நிறுவனத்தின் மூலம் செய்து முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே உடைந்து விழுந்துள்ளன என்ற தொடர் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலும் இந்நிறுவனத்திற்கு அ.தி.மு.க அரசின் பல்வேறு டெண்டர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது எப்படி எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
துறையின் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நேரடிக் கண்காணிப்பில் கட்டப்பட்ட கட்டுமானத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டிருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!