Tamilnadu
‘இந்தி படிங்க..’ : தமிழர்களின் எதிர்ப்புக்குரலை அடுத்து வருத்தம் தெரிவித்த Zomato - என்ன நடந்தது?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஆர்டர் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை.
இதனால் விகாஷ் சொமேட்டோ சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது, “மொழிப் பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்க முடியவில்லை” என சொமேட்டோ சேவை மையம் கூறியுள்ளது.
இதையடுத்து விகாஷ், “தமிழ்நாட்டில் சொமெட்டோ செயல்பட்டால், அங்கு வாழும் மக்களின் மொழியை அறிந்தவர் வேலைக்கு அமர்த்த வேண்டும்” என கூறியுள்ளார். இதற்கு, “இந்தி நமது தேசிய மொழி,எல்லோரும் குறைந்தபட்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என சொமேட்டோ சேவை மையம் விகாஷிடம் கூறியுள்ளது.
சொமேட்டோ நிறுவனத்தின் இந்த உரையாடலை விகாஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தி.மு.க எம்.பி கனிமொழி மற்று செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் பலரும் சொமேட்டோ நிறுவனத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் ட்விட்டரில் #boycottzomato, #Reject_zomato போன்ற ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தனது வாடிக்கையாளரின் பேச்சுக்கு சொமேட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வணக்கம் தமிழ்நாடு!
எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.
இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை . ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்), மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- zomato” எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?
-
திராவிட மாடலின் ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 1.8 கோடி பேர் பயன் : அப்பாவு புகழாரம்!