Tamilnadu

மனு கொடுத்த 24 மணி நேரத்தில் கிடைத்த வீடு... ஏழைப் பெண்ணின் கண்ணீர் துடைத்த தி.மு.க அரசு!

கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நிறைவேறாத நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மனு அளித்த 24 மணி நேரத்தில், அரசு வீடு ஒதுக்கப்பட்டதால் ஏழைப் பெண்ணின் குடும்பத்தினர் இன்பஅதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் இவரைவிட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தனது மாற்றுத்திறனாளி மகள் உள்பட 3 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

மாற்றுத்திறனாளி மகளுக்கு அரசு வழங்கி வரும் உதவித்தொகை மற்றும் கூலி வேலை செய்து வரும் சொற்ப வருமானத்தில் செல்வி தனது மகளான நிஷாவை கல்லூரியிலும், நிவேதா என்பவரை பன்னிரண்டாம் வகுப்பிலும் மாற்றுத்திறனாளியான ரோகினியை ஒன்பதாம் வகுப்பிலும் படிக்க வைத்து வருகிறார்.

குறைந்த ஊதியத்தில் 3 மகள்களை படிக்க வைத்து வாடகை வீட்டில் குடியிருக்கும் தனக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியில் எவ்வித பலனும் கிட்டாத நிலையில் தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மனுக்கள் பெரும் மக்கள் சபை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் செல்வி தனது மகளுடன் சென்று அமைச்சரிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார் .

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடு ஒதுக்குமாறு நேற்று நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், இந்த மனு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று மூன்று பெண் குழந்தைகள் நலன் கருதி உடனடியாக செல்விக்கு கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தள வீடு ஒன்றை ஒதுக்கினார்.

அமைச்சரிடம் மனு அளித்த 24 மணி நேரத்திலேயே அரசு வீடு ஒதுக்கப்பட்டதால், செல்வியின் குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது.

இதுகுறித்து செல்வி கூறுகையில், “என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கவும், குடும்பத்தை நடத்தவும் எனது மாற்றுத்திறனாளி மகளான ரோகிணிக்கு வரும் அரசு நிதியுதவியே பயன்பட்டது.

அரசின் இலவச வீடு வேண்டி பல முறை மனுக்கள் அளித்தும் தீர்வு எட்டப்படவில்லை. நேற்று மக்கள் சபை கூட்டத்திற்கு வந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேரில் சென்று மனு அளித்த 24 மணி நேரத்தில் எங்களுக்கு வீடு கிடைத்துள்ளது. தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்” என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Also Read: “10 வருசமா நடக்கல.. இப்போ 1 மணி நேரத்துல வீடு கெடைச்சிடுச்சு” : மாற்றுத்திறனாளி இளைஞரின் தாய் நெகிழ்ச்சி!