Tamilnadu
“மது அருந்துவோர், அசைவப் பிரியர்களுக்காக..” : புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது என பலரும் தயங்குவதால், அவர்களுக்காக வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. காரணம் பண்டிகை நாட்களாக இருந்ததாலும், தொடர்ந்து மருத்துவ அலுவலர்களால் தடுப்பூசிப் பணிகள் நடைபெற்று வந்ததாலும், விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த மாதத் தொகுப்பிற்குத் தேவையான தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடமிருந்து வரத் தொடங்கியுள்ளன. தமிழகம் தடுப்பூசி செலுத்துவதைப் பாராட்டி தடுப்பூசிகளை விரைந்து வழங்கி வருகின்றனர்.
நியூசிலாந்தில் ஒரே நாளில் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஆனால், தமிழகத்தில் ஒரே நாளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் முகாம்களில் போடப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 5வது மெகா தடுப்பூசி முகாமின்போது 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட கூடுதலான மருத்துவ முகாம்கள் மூலம் மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் பயனடையும் விதமாக தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் கடந்த வாரங்களைப் போல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறாமல், வரும் சனிக்கிழமை (அக்டோபர் 23) அன்று நடத்தப்படும்.
ஏனென்றால் மது அருந்துபவர்களும், அசைவம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கூடாது என்கிற தவறான தகவலால் பலரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுக்கின்றனர். அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அனைவரும் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!