Tamilnadu
5 கிலோ தங்கம், ரூ.23 லட்சம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு சோதனையில் மாட்டிக்கொண்ட விஜயபாஸ்கர்!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம் மற்றும் 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2016அம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரை கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 27 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் தன் மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கிக் குவித்ததாகவும், லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்தது. இதில் சுமார் 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி பணம் சம்பாதித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 இடங்கள், திருச்சி மாவட்டத்தில் 4 இடங்கள், மதுரை மாவட்டத்தில் ஒரு இடம், கோவை மாவட்டத்தில் 2 இடங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்கள் மற்றும் சென்னையில் 8 இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர். அமைச்சராக இருந்த காலத்தில் அவர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை வாங்கி இருப்பது இந்தச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 மணி நேரமாக இந்தச் சோதனையில் ரூ.23,85,700 ரொக்கப் பணம், தங்க நகைகள் 4.87 கிலோ, 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவரித்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.23,82,700 மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்