Tamilnadu
“அசந்திருந்தா உயிரே போயிருக்கும்” : சிறப்பான சிகிச்சையளித்து ஏழை பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
தாமதித்தால் பார்வை பறிபோகும் ஏன் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்ற சூழலில் பெண்ணுக்கு முற்றிலும் இலவசமாக தரமான சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளனர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா. 49 வயதான இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் தலையில் காயமுற்று அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
20 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவருக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக காதுகளில் ஒரு வித ஒலி, கண்கள் சிவந்து வெளியே வரத் துவங்கியது அன்று முதலே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் முழுமையாக பலன் கிடைக்கவில்லை.
வறுமையின் காரணமாக தொடர் சிகிச்சை பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நாட்கள் செல்லச் செல்ல வலது புற கண் வெளியே விழுவது போன்ற நிலைக்கு வரவே மீண்டும் மருத்துவமனையை நாடியுள்ளார்.
தனியார் மருத்துவமனில் 8 முதல் 10 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கவே, சென்னை வந்து மருத்துவம் பார்க்க முயற்சித்துள்ளார். அதன்படி, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை குறித்து அறிந்து அங்கு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அங்கு சத்யாவுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் மூலம் வெகுவிரைவாக குணமடைந்துள்ளார் சத்யா.
இதுகுறித்து சிகிச்சை பெற்று குணமடைந்த சத்யா கூறுகையில், “4 பிள்ளைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். ஏழ்மை நிலை காரணமாக உடல் நலனை பார்த்துக்கொள்ள இயலாத சூழல் இருந்தது.
இன்று நான் பார்வையோடு நலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் அரசு மருத்துவர்களும் தான் காரணம்” என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
சிகிச்சை குறித்தும் அவருடைய உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெரியகருப்பன் பேசுகையில், “இது சாத்தியப்பட்டதற்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தடையின்றி கிடைத்ததே காரணம். தமிழக அரசு அதனை சிறப்பாக செய்தது.
இவருக்கு அறுவை சிகிச்சையின்றி ஆஞ்சியோகிராம் சிகிச்சை முறையில் காலில் தொடைப்பகுதியில் துளையிட்டு அதன் வழியாக சிறிய கருவியை செலுத்தி அவருடைய மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினை சரிசெய்தோம். பின்னர் கண் பிரச்சனை சரிசெய்யப்பட்டது. காதுகளில் ஏற்பட்ட ஒலியும் தற்பொழுது இல்லை.
தொடர் மருந்துகள் எடுக்கத் தேவையில்லை இவர் வேலைக்கு செல்பவராக இருந்தால் வீடு திரும்பிய 3-4 நாட்களில் வேலைக்குக்கூட செல்லலாம். தனியார் மருத்துவமனைக்கு நிகராகவும் ஏன் அதனை விட சில கருவிகள் நவீனமாகவும் அரசு மருத்துவமனையில் உள்ளது. நிச்சயம் இது போன்று பாதிக்கப்பட்டோர் பயன்பெறலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!